கோலாலம்பூர், நவம்பர் 23 – தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட மாட்டாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உறுதி அளித்துள்ளார். இத்தகைய பள்ளிகளை மூட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கைகளை வெளியிடுவது மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை பெற எந்த வகையிலும் உதவாது என்று அவர் கூறியுள்ளார்.
“சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என்று ஒரு பக்கம் குரல் கொடுத்துக் கொண்டே,
மறுபக்கம் சீன சமூகத்தின் ஆதரவையும் வலுப்படுத்திக் கொள்ள நாம் முயற்சிப்பது முரண்பட்ட ஒரு நிலையாகும். வெளிப்படையான ஜனநாயக அமைப்பில் மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி அமைக்க வேண்டுமானால், நமக்கு ஒட்டுமொத்த ஆதரவு தேவை,” என்றார் நஜிப்.
பிற இனத்தவர்களின் ஆதரவு மிக முக்கியம் என்பதால் அம்னோ தலைவர்களும் தங்கள் தொகுதிகளில் தாய்மொழிப் பள்ளிகளை அமைக்க அனுமதி கோரி இருப்பதாக
குறிப்பிட்டுள்ள அவர், பிற இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தேசிய முன்னணி
வேட்பாளர்கள் வெற்றி பெறுவது கடினம் என்று கூறியுள்ளார்.
“53 விழுக்காடு மலாய்க்காரர்கள் உள்ள தொகுதியில், தேசிய முன்னணி
வேட்பாளர்களால் 47 விழுக்காடு அளவில் உள்ள மலாய்க்காரர் அல்லாதவர்களின்
ஆதரவைப் பெற முடியாவிட்டால், அவர் வெற்றி பெற மாட்டார். இந்த அரசியல்
நிதர்சனத்தை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அம்னோ போட்டியிடும்
தொகுதிகளில் மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவும் தேவை,” என்று நஜிப்
தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அம்னோவின் பலத்தை சார்ந்துள்ளனவா?
என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “அது உண்மைதான் என்றாலும்
அம்னோவுக்கும் மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது,”
என்றார்.