பெய்ஜிங், நவம்பர் 28 – இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா, 18 கடற்படைதளங்களை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதிகளில் இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த 18 இடங்களில் கடற்படை தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின.
மேலும் சீனா, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை புதுப்பித்து அங்கு தனது நீர்மூழ்கிக் கப்பல்களையும் நிறுத்தியது. சீனாவின் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் இந்தியா கவலையுற்றது.
இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படை தளங்கள் அமைப்பதாக வெளியான செய்தி குறித்து சீன தேசிய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கெங் யான்ஷெங் கூறுகையில், “கடற்படை தளம் தொடர்பாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், கொழும்புவில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக அவர் கூறுகையில், “ஏதேன் மற்றும் சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவே சீன நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டுமுறை சென்றது” என்று தெரிவித்துள்ளார்.