சென்னை, நவம்பர் 28 – இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கும் மோடியின் செயல் தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுதொடர்பாக இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“நேபாள தலைநகர் காத்மண்டுவில் நேற்று தொடங்கிய சார்க் அமைப்பின் 18 ஆவது மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் வெகுவிரைவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவிருப்பதாகவும், அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்”.
“இந்தியப் பிரதமரின் இந்த பேச்சு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உலக நாடுகளும், உலகத் தமிழர்களும் கொடுத்த தொடர் நெருக்கடி காரணமாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது”.
“இந்த விசாரணைக்கு இலங்கை அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், ராஜபக்சே எப்படியாவது தண்டிக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்”.
“அதன்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டியவரான ராஜபக்சே, இலங்கை அதிபர் தேர்தலில் தொடர்ந்து 3 வது முறையாக வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதற்கு பாமக சார்பில் மிகுந்த கண்டனத்தை தெரிவிக்கிறோம்.”
“இதன்மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளையும் பிரதமர் நரேந்திர மோடி புண்படுத்திவிட்டார். ராஜபக்சே தமது செயலுக்காக இதுவரை வருந்தவில்லை. மாறாக, இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்கு ஆணையிடப்பட்டதை பெரும் குற்றமாக அவர் சித்தரித்து வருகிறார்” என ராமதாஸ் கூறினார்.