சிட்னி, நவம்பர் 29 – இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும், சிறந்த நவீன தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவருமான எஸ்.பொ. என்று அழைக்கப்படும் ச.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 82.

அவர் மலேசியாவுக்கும் வருகை தந்து இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றார்.
யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பொ, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை மட்டக்களப்பில் கழித்தவராவார்.
தனது இறுதிக் காலத்தில் ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார்.
ஓர் இலக்கியவாதியாக எஸ்.பொ, கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான படைப்புக்களை தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார்.
மொழிபெயர்ப்பு நூல்களும் இவரது படைப்புக்களில் அடக்கம்.
ஆஸ்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த “அக்கினிக்குஞ்சு” அனைத்துலக இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழி பெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் “Weep Not Child” என்ற நாவலை தமிழில் “தேம்பி அழாதே பாப்பா” என்று மொழிபெயர்த்துள்ளார்.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.