பெய்ஜிங், டிசம்பர் 3 – புகையிலை ஒழிப்பு குறித்த இசை ஆல்பத்தில், மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
உலக அளவில் புகையிலை பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில், சீனாவுக்கும் முக்கிய இடம் உண்டு. அங்கு சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் சீனாவிற்காக தங்கப் பதக்கம் வென்ற பெங் ஜீ என்பவர் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார்.
இந்த ஆல்பத்தில், பில்கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பாடலின் சில வரிகளை பாடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன என்ற கூற்றை மாற்றும் விதமாக மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சமூகம் சார்ந்த சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.