நாகலாந்து (இந்தியா), டிசம்பர் 4 -இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான நாகலாந்து, நவநாகரீகம் இன்னும் முழுமையாக சென்றடையாத பிரதேசமாக, அதே சமயத்தில் தனது பாரம்பரியத்தையும், மரபுகளையும் இழக்காமல் கட்டிக் காத்து வரும் மாநிலமாகவும் திகழ்ந்து வருகின்றது.
‘ஹோர்ன்பில் திருவிழா’ (Hornbill Festival) என்பது சுமார் 10 நாட்கள் நீடிக்கும் – இந்த மாநிலத்தின் கலாச்சார, பண்பாட்டுத் தொன்மையையும், வித்தியாசத்தையும் காட்டும் – மிகப் பெரிய திருவிழாவாகும்.
ஹோர்ன்பில் என்பது ஒரு வகை பறவையினத்தின் பெயராகும்.
நாகலாந்து மாநிலத்தின் கோஹிமா நகரின் அருகில் அமைந்துள்ள கிசாமா என்ற பாரம்பரிய கிராமத்தில் நடைபெற்ற ஹோர்ன்பில் திருவிழாவின் வித்தியாசப் படக்காட்சிகளை இங்கே காணலாம். நாகலாந்து தலைநகர் குவாஹாத்தியிலிருந்து சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்திருக்கின்றது.
திருவிழாவில் அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்திலிருந்து வந்திருந்த ‘நிஷி’ ஆதிவாசி குழுவின் நடனக் காட்சி
நாகலாந்து இன மக்களின் ‘காரோ’ (Garo) பிரிவினரின் ‘வாங்லா’ (‘Wangla’) நடனம்…
பாரம்பரிய நடனத்தில் பெண்களுக்கு நாங்களும் சளைத்தவர்களல்ல என நடனம் ஆடிக் காட்டும் நாகலாந்தின் ஆண் மக்கள்….
நாகலாந்து பாரம்பரிய உடையில் இருக்கும் இந்த மனிதரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதா? இவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான்!
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நாகலாந்து ஹோர்ன்பில் திருவிழாவில் கலந்து கொண்ட மோடி, அப்போது நாகலாந்து மக்களின் பாரம்பரிய உடையணிந்து மக்களை மகிழ்வித்தார்.
“நாகலாந்தின் தனித்துவமிக்க, வித்தியாசமான கலாச்சார மரபுகளை இந்த திருவிழா பாதுகாக்கிறது, மேம்படுத்துகின்றது” என்ற பாராட்டு மொழிகளையும் மோடி தனது உரையில் தெரிவித்தார்…
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப் பயணிகளையும் உலகின் பல பாகங்களிலிருந்து இந்த திருவிழா ஈர்க்கின்றது. பல்வேறு நாகலாந்து இன மக்களின் பிரிவினரை ஒரே இடத்தில் ஒருமுகமாக இந்த திருவிழா இணைக்கின்றது. பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், புராணக் கதைகள் என களைகட்டும் திருவிழா இது…
இதுதான் நாகலாந்து மக்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்து விட்ட ஹோர்ன்பில் வகை பறவை. நமது சரவாக் மாநிலத்தின் அடையாளச் சின்னமாகப் போற்றப்படுவதும் இந்தப் பறவைதான். அதனால்தானோ என்னவோ, சரவாக் மாநில மக்களின் பாரம்பரிய உடைகளும், நாகலாந்து மக்களின் உடைகளும் பெருமளவில் ஒத்திருக்கின்றன….
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி இந்த திருவிழாவைத்தொடக்கி வைக்க வருகை தந்த இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு தங்களின் பாரம்பரிய உடைகளை அணிவித்து மகிழும் விழா ஏற்பாட்டாளர்கள். நாகலாந்து தனி மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டு 25ஆண்டுகள் நிறைவு எய்துவதை முன்னிட்டும் இந்த முறை இந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பச்சை குத்தப்பட்டு, வறண்ட நிலையில் இருக்கும் கிழட்டு முகம்தான்! ஆனால் அதுதான் வெளிநாட்டு சுற்றுப் பயணி ஒருவரை ஈர்த்திருக்கின்றது நாகலாந்து திருவிழாவில் ….முத்தமிடுவதுபோல் புகைப்படத்திற்கு காட்சி தரும் சுற்றுப் பயணி ஒருவர்…
பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நாகலாந்து இன மக்கள் நடனம் ஆடுவதற்காக அணிவகுத்து நிற்கும் காட்சி…
நாகலாந்து ஆதிவாசி மக்களின் மற்றொரு வகை நடனக் காட்சி …
படங்கள்: EPA