Home இந்தியா நாகாலாந்து, திரிபுரா, மேகாலாயா 3 மாநிலங்களிலும் பாஜக ஆதரவு ஆட்சி

நாகாலாந்து, திரிபுரா, மேகாலாயா 3 மாநிலங்களிலும் பாஜக ஆதரவு ஆட்சி

1350
0
SHARE
Ad

புதுடில்லி – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக வரிசையாகப் பல மாநிலங்களைக் கைப்பற்றி தனது ஆட்சியை நிலை நாட்டிவரும் பாஜக அண்மையில் நடந்த வடமேற்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து, மேலும் 3 மாநிலங்களில் தனது ஆதிக்கத்தைப் பதித்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் தனிப் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது. 43 தொகுதிகளை பாஜக கூட்டணி பெற்றிருக்கும் வேளையில் 16 தொகுதிகளை மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருக்கிறது.

25 ஆண்டுகளாக அங்கு நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பாஜக மாநிலத்தைக் கைப்பற்றியுள்ளது.

மேகலாயாவில் பாஜக ஆதரவுடன் காங்கிரஸ் அல்லாத ஆட்சி

#TamilSchoolmychoice

மூன்று மாநிலங்களில் மேகாலாயாவில் மட்டுமே காங்கிரசுக்கு சற்றே ஆறுதல் கிடைக்கும் வகையில் 21 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கின்றன. எனினும் இது பெரும்பான்மை வெற்றி அல்ல. மொத்தமுள்ள 59 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. எனினும், இந்த வெற்றி பாஜக அந்த மாநிலத்தில் கால்பதிக்க அதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

என்பிபி எனப்படும் தேசிய மக்கள் கட்சி மேகலாயாவில் 19 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மற்ற கட்சிகள் 17 இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து என்பிபி மற்ற கட்சிகளுடன் இணைந்து மேகாலாயாவில் பாஜக ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் தகவல்களின்படி என்பிபி கட்சியின் தலைவர் கொன்ராட் சங்மா (Conrad Sangma) முதல்வராகப் பதவியேற்க, பாஜக மற்றும் மற்ற சிறிய கட்சிகள் சிலவற்றுடன் ஆதரவுடன் மேகலாயாவில் பாஜக ஆதரவிலான ஆட்சி அமைகிறது.

மற்ற கட்சிகளுடன் இணைந்து 33 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பாஜக கூட்டணி பெற்றிருக்கிறது.

நாகலாந்து மாநிலத்திலும் பாஜக ஆதரவுடன் கூட்டணி ஆட்சி

நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 31 சட்டமன்றங்களை பாஜக கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. என்.பி.எஃப் எனப்படும் நாகா மக்கள் முன்னணி கட்சி 26 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மற்ற கட்சிகள் 3 தொகுதிகளை வென்றுள்ள நிலையில், இங்கேயும் காங்கிரஸ் எந்த ஓர் இடத்தையும் பெற முடியாத அளவுக்கு மாபெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

இங்கேயும் பாஜக மற்றும் என்டிபிபி கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கின்றன.

இந்த நிலவரங்களைத் தொடர்ந்து வடமேற்கின் மேற்குறிப்பிட்ட 3 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி அல்லது பாஜக ஆதரவுடன் கூடிய ஆட்சிகள் அமைக்கின்றன.