ஜோர்ஜ் டவுன் – பினாங்கு கடலடிப் பாதை குத்தகையைப் பெற்ற செனித் கொன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் அம்னோவின் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் ரஹிமுக்கு எதிராக அனுப்பியிருந்த சட்ட நடவடிக்கைக் கடிதத்தை மீட்டுக் கொண்டுள்ளது.
அப்துல் அசிஸ் 3 மில்லியன் பெற்றதாகக் கூறி. அதற்குரிய ஆலோசனைப் பணிகளை அவர் வழங்காத காரணத்தால் அந்தப் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என செனித் நிறுவனம் பிப்ரவரி 24-ஆம் தேதி அந்தச் சட்டக் கடிதத்தை அனுப்பியிருந்தது.
அதைத் தொடர்ந்து ஷா ஆலாம் காவல் நிலையத்தில் அப்துல் அசிஸ் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக புகார் ஒன்றை செய்திருந்தார்.
“நான் குற்றமற்றவன் என்பது உறுதியாகியுள்ளது. செனித் நிறுவனத்திடமிருந்து எந்தப் பணத்தையும் நான் பெறவில்லை. பணம் பெறுவதற்காக சில தரப்புகள் எனது பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றன என்பது நிரூபணமாகியுள்ளது”
நேற்று சனிக்கிழமை தனக்குக் கிடைக்கப்பெற்ற கடிதத்தில் என்மீதான சட்ட நடவடிக்கைக் கடிதத்தை அவர்கள் மீட்டுக் கொள்வதாகவும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர் என்றும் அப்துல் அசிஸ் கூறினார்.
“தனது பெயரில் இருந்த கறையைத் துடைத்திருக்கும் செனித் நிறுவனத்திற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் – இருந்தாலும் எனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எனது வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசிப்பேன்” என்றும் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
பினாங்கு மாநில தபோங் ஹாஜி (ஹஜ் யாத்திரை நிதி வாரியம்) மையத்திற்கு வருகை தந்த அப்துல் அசிஸ் அங்கு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து இந்த விவரங்களை வெளியிட்டார்.
இந்த விவகாரம் குறித்து செனித் கொன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் சார்பில் எந்தவித விளக்கமும் வழங்கப்படவில்லை.