Home நாடு பக்காத்தான் ஆட்சியில் பள்ளிகளில் கணிதம், விஞ்ஞானம் மீண்டும் ஆங்கிலத்தில்!

பக்காத்தான் ஆட்சியில் பள்ளிகளில் கணிதம், விஞ்ஞானம் மீண்டும் ஆங்கிலத்தில்!

1052
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் குறித்த அரசியல் பிரச்சாரப் போட்டிகளுக்கு இடையில், பள்ளிகளின் கற்பித்தல் பிரச்சனைகளும் சர்ச்சைக்குரிய விவாதங்களாக உருவெடுத்திருக்கின்றன.

பக்காத்தான் ஹரப்பான் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தால், கணிதம் விஞ்ஞானம் பாடங்களை பள்ளிகளில் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் முடிவு எடுக்கப்படலாம் என துன் மகாதீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

எனினும் இந்தக் கருத்துக்கு மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கமான அபிம் தலைவர் முகமட் ராய்மி அப்துல் ரஹிம் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

அபிம் தலைவர் முகமட் ராய்மி அப்துல் ரஹிம்
#TamilSchoolmychoice

கணிதம், விஞ்ஞானம் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதால் மாணவர்களின் அறிவுத் திறன் அதிகரிப்பதற்கான ஆதாரபூர்வ முடிவுகள் காணப்படவில்லை என்றும் கூறியிருக்கும் அவர், 2004-ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி மாணவர்களின் திறன் குறைந்து வருவதும், முன்பிருந்ததை விட மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.

“ஆங்கிலத்தை மேலும் சிறப்பாக போதிக்கும் வழிவகைகளை அரசாங்கம் காணவேண்டும். மாறாக, பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என்ற ஆலோசனையை அரசுக்கு வழங்குவதில் அபிம் உறுதியாக இருக்கிறது” என்றும் முகமட் ராய்மி தெரிவித்திருக்கிறார்.

கணிதம், விஞ்ஞானத்தை ஆங்கிலத்தில் கற்பிக்கும் பிபிஎஸ்எம்ஐ திட்டத்தை ஒத்திருக்கும் இருமொழித் திட்டத்தையும் அரசாங்கம் மேலும் அமுல்படுத்தாமல் கைவிட வேண்டும் என்றும் முகமட் ராய்மி வலியுறுத்தி இருக்கிறார்.

மலாய் மொழி பாடங்களைக் கற்பிக்கும் மொழியாகத் தொடர வேண்டும் பல கல்விமான்களும், அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்றும் கூறிய அவர் அதற்கு மாற்றாக ஆங்கிலத்தைக் கொண்டு வருவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

பிபிஎஸ்எம்ஐ திட்டம் 2003-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே ஆங்கில மொழித் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் 2012-இல் அப்போதைய கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான மொகிதின் யாசினால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், பக்காத்தானின் சார்பில் துன் மகாதீர் கூறிய கருத்து குறித்து பதிலளித்த கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் “இவை எதிர்க்கட்சிகளின் வெற்று வாக்குறுதிகள். நிறைவேற்றப்பட முடியாத செயல்கள். பக்காத்தான் அடிக்கடி இந்தப் பிரச்சனையில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.