Home நாடு அப்துல் அசிஸ் ஊழல் வழக்குகளில் இருந்து தற்காலிக விடுவிப்பு

அப்துல் அசிஸ் ஊழல் வழக்குகளில் இருந்து தற்காலிக விடுவிப்பு

439
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோ சார்ந்த முக்கியத் தலைவர்களின் வழக்குகளில் இன்று நீதிமன்றத்தில் முக்கியத் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அகமட் சாஹிட் 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிசும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

அம்னோ தலைவர்களில் நன்றாக – சரளமாக – தமிழ் பேசத் தெரிந்தவர் அப்துல் அசிஸ். பாலிங் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

பேராக், கெடா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் திட்டங்களின் தொடர்பில் அப்துல் அசிஸ் கையூட்டுப் பெற்றதாக அவர் மீது 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

தன் மீதான 13 ஊழல் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய
வேண்டுமென மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அப்துல் அசிஸ் விண்ணப்பம் ஒன்றைச் சமர்த்திருந்தார். அந்த விண்ணப்பத்தைக் கடந்த செப்டம்பர் 6-ஆம்
தேதி விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் சுமத்தப்பட்டிருந்த 13 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

எஞ்சிய 9 குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னைத் தற்காலிகமாக விடுவிக்க வேண்டும் என அப்துல் அசிஸ் மற்றொரு விண்ணப்பத்தை சட்டத்துறை அலுவலகத்தில்
சமர்ப்பித்திருந்தார்.

அதன் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்)
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராயா அஸ்லிண்டா அஹாட் இந்த 9  குற்றச்சாட்டுகளை சட்டத் துறை அலுவலகம் மீட்டுக்கொள்வதால் அப்துல் அசிசை தற்காலிக விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து அப்துல் அசிஸை தற்காலிக விடுதலை செய்யும் உத்தரவை நீதிபதி அஸுரா அல்வி பிறப்பித்தார். தற்காலிக விடுதலைக்கான காரணங்கள் தனக்கு திருப்தி அளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

நீதிமன்றம் தற்காலிக விடுதலை மட்டுமே செய்திருப்பதால், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அப்துல் அஜிஸ் மீது மீண்டும் சட்டத் துறை அலுவலகம் வழக்குத் தொடர முடியும்.

55 வயதான அப்துல் அஜிஸ் 5.2 மில்லியன் ரிங்கிட் கையூட்டுப் பெற்றதாக மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளையும் 972,414.60 ரிங்கிட் கள்ளப் பணப்
பரிமாற்றத் தொடர்பில் 6 குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியிருந்தார்.

2010-க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.