Home நாடு புங் மொக்தார் : தற்காப்பு வாதம் புரிவதற்கு இடைக்காலத் தடை

புங் மொக்தார் : தற்காப்பு வாதம் புரிவதற்கு இடைக்காலத் தடை

465
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெல்க்ரா பெர்ஹாட் தொடர்பான ஊழல்  வழக்கு விசாரணையில் தற்காப்பு வாதம் புரிவதற்கு புங் மொக்தாருக்கும் அவரின் மனைவி சிசி இசட் அப்துல் சமாட்டுக்கும் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ்) உத்தரவிட்டிருந்தது.

அதற்கான நீதிபதியின் தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, தான் தற்காப்பு வாதம் புரிவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என, சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினும் அவரின் மனைவியும் சமர்ப்பித்த மனு நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா, புங் மொக்தார் எதிர்வாதம் செய்ய வேண்டுமென அமர்வு நீதிமன்ற நீதிபதி அளித்த உத்தரவை மறுஆய்வு செய்வதற்காக தற்காப்பு வாதம் புரியும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

அரசு தரப்பு வழக்கறிஞர் புங் மொக்தார் தம்பதியினரின் விசாரணையை இடைநிறுத்துவதற்கான விண்ணப்பத்தை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மே 3, 2019 அன்று பப்ளிக் மியூச்சுவல் யூனிட் டிரஸ்ட் நிறுவனத்தில் 150 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய ஃபெல்க்ராவின் ஒப்புதலைப் பெறுவதற்கு தூண்டுதலாக மொத்தம் 2.8 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக புங் மொக்தார் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில், பெல்க்ராவின் நிர்வாக அதிகாரமில்லாத தலைவராக புங் மொக்தார் இருந்தார்.

அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி சிஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.

செப்டம்பர் 2 ஆம் தேதி, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோசினா அயோப், இந்த வழக்கில் அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை முதல்கட்ட ஆதாரங்களை நிரூபித்திருப்பதால் புங் மொக்தாரும் அவரது மனைவியும் தங்கள் தற்காப்பு வாதத்தைப் புரிய வேண்டுமென  உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 323-வது பிரிவின் கீழ், செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அந்தத் தம்பதியினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.