டிசம்பர் 4 – செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, மனிதனின் இறுதிப் பயணத்திற்கு வழிவகுக்கும் என பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் கணிப்பொறிகளுக்கும், திறன்பேசிகளுக்கும் விடை கொடுக்கும் விதமாக, ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் (Artificial Intelligence – AI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் உலகின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும், அறிவியலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் விரைவில் மாற்றமடையும் தன்மை கொண்டவை.
அவை எந்த ஒரு தருணத்திலும், டெர்மினடர் படங்களில் வருவது போல் மனித குலத்தை முந்திச் செல்ல வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவின் முதற்கட்ட பரிசோதனைகளை நாம் வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். இதன் மூலம் மனித குலத்திற்கு மிகுந்த பயன்கள் உள்ளன. எனினும், இந்த தொழில்நுட்பத்தின் முழுவளர்ச்சி மனித குலத்தின் அழிவிற்கு ஆரம்பமாக இருக்கும்”
“செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் தன்னைத் தானே மறு வடிவமைப்பு செய்துகொள்ளும் தன்மை வாய்ந்தவை. மனிதர்களுக்கு உள்ள குறைந்த உயிரியல் பரிணாம வளர்ச்சி செயற்கை நுண்ணறிவுடன் போட்டியிட முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்டீபன் ஹாக்கிங், ‘நியோரான்’ (neurone) நோயினால் பாதிக்கப்பட்டு நடக்கும் திறனை இழந்தவர்.
அவரால் பேசுவது என்பது இயலாத காரியம். எனினும் அவர், வாய்ஸ் சிந்தசைசர் உதவியுன் பேசி வருகிறார். உலக அறிந்த மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஹாக்கிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.