கோலாலம்பூர், டிசம்பர் 5 – சமீப காலங்களில், மலேசிய கலைஞர்களின் உருவாக்கத்தில் மிகத் தரமான படங்கள் உருவாகத் தொடங்கிவிட்டதற்கு சான்றாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல சிறந்த வெற்றிப் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் குறிப்பாக 2014 -ம் ஆண்டு, மலேசிய ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில், பல திறமைவாய்ந்த மலேசிய இயக்குநர்களின் கைவண்ணத்தில் முழு நீளப் படங்களும், குறும்படங்களும் வெளியிடப்பட்டு, மலேசியப் படங்களின் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்தன.
அந்த வகையில், 2014-ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில், வெளியிடப்பட்டிருக்கும் “அவள் ஒரு பெண்” என்ற இந்த குறும்படம் ரசிகர்களின் உணர்வுகளைத் தொடும் கதையுடன் களமிறங்கி இருக்கின்றது.
புராண காலம் தொடங்கி, இன்றைய நவீன உலகம் வரை, பெண்களுக்கு எதிராக பல நாடுகளில் நடக்கும் பாலியல் வல்லுறவுகளை தினசரி நாளிதழ்களில் படித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். அப்படி ஒரு சம்பவம் தான் படத்தின் கதை.
கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்திருக்கும் மோகன்ராஜ், அம்மு அவ்வளவு இயல்பாக இருக்கின்றார்கள். கணவன், மனைவியாகக் காட்டப்பட்டிருக்கும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு மிக அழகாக, நாகரீகமாகக் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அவர்களைத் தவிர மற்ற கதாப்பாத்திரங்களும் அவர்களின் நடிப்பை மிகச் சிறப்பாக செயற்கைத்தனம் இன்றி வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஸ்ரீஷா கங்காதரன் மற்றும் படத்தின் இயக்குநர் ஹேமராஜின் வசனம் ரசிக்க வைக்கின்றது. ஜெயா ஈஸ்வரின் பின்னணி இசை அருமை.
படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதாலும், ஏற்கனவே பார்த்துப் பழகிய காதல் காட்சிகள் என்பதாலும் படம் பார்ப்பவர்கள் அடுத்த என்ன தான் நடக்கப் போகிறது என்பதை அறிய காட்சிகளை ஃபார்வர்டு செய்து பார்க்கும் எண்ணம் தோன்றுகிறது.
வசன உச்சரிப்பையும் மீறி பின்னணி இசை சற்று அதிகமாகக் கேட்பதால், சில காட்சிகளில் வசனங்களை மீண்டும் கேட்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
என்றாலும், நல்ல கதை, இயல்பான நடிப்பு, துல்லியமான அழகிய ஒளிப்பதிவு என நிச்சயமாக இந்த படம் 2014-ம் ஆண்டு வெளிவந்த மிகச் சிறந்த மலேசியக் குறும்படங்களில் ஒன்று.
“அவள் ஒரு பெண்” குழுவினருக்கு செல்லியலின் சார்பாக வாழ்த்துகள்.
-ஃபீனிக்ஸ்தாசன்
தயாரிப்பு: பிக் ஃபிலிம்ஸ்
இணை தயாரிப்பு: விக்னேஷ் லோகராஜ் அசோகன், சிவா அப்பாரு
எழுத்து, இயக்கம்: ஹேமராஜ் மணிவண்ணன்
இணை இயக்கம்: ஜெய் கிஷான்
ஒளிப்பதிவு: அர்வின் தாரான்
வசனம்: ஸ்ரீஷா, ஹேமராஜ்
படத்தொகுப்பு : சுமன், சதிஸ்
பின்னணி இசை: ஜெயா ஈஸ்வர்
வண்ணம் மெருகூட்டல்: சதிஸ் எடிட் லேப்
நடிகர்கள்: மோகன ராஜ், ஆமு, ஸ்ரீராம் ஜி, மகேந்திரன், ஜேமி ஜமாலியா