லாகோஸ், டிசம்பர் 5 – ஆப்ரிக்க யூனியன் நாடுகளான லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் கினியா ஆகிய 3 நாடுகளில் கடந்த ஆண்டு இறுதியில் எபோலா நோய் தாக்கியது. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இம்மூன்று நாடுகளிலும் இன்று வரை சுமார் 7 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இம்மூன்று நாடுகளில் நைஜீரியா போன்ற ஆப்ரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர்.
அவர்களில் சிலரை எபோலா நோய் தாக்க தொடங்கியது. இதனால் இம்மூன்று நாடுகளில் பணியாற்றி வரும் நைஜீரியாவை சேர்ந்த 250 மருத்துவர்கள் உள்பட மருத்துவ குழுவினரை நாடு திரும்பும்படி நேற்று நைஜீரிய அரசு உத்தரவிட்டது.
அதே சமயம், எபோலா நோய் தடுப்புக்கு நிதி உதவி அளிக்கவும் நைஜீரியா முன்வந்துள்ளது. இம்மூன்று நாடுகளிலும் எபோலா நோய் தாக்குதலின் தீவிரத்தை குறைக்கவும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நைஜீரிய தொலைபேசி நிறுவனம் ரூ.618 கோடி வழங்கியுள்ளது.
அதேபோல், நைஜீரியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ரூ.185 கோடி வழங்கியுள்ளார். எனினும், இங்கு இந்நோயின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்று ஆப்ரிக்க ஆணையத் தலைவர் நகோசானா தலாமினி ஜுமா கூறினார்.