Home நாடு அரசியல் பார்வை: பிரதமரின் ஒப்புதலோடுதான் மஇகா மறுதேர்தல்! பழனிவேல் தலைமை நீடிக்குமா?

அரசியல் பார்வை: பிரதமரின் ஒப்புதலோடுதான் மஇகா மறுதேர்தல்! பழனிவேல் தலைமை நீடிக்குமா?

571
0
SHARE
Ad

mic-palanivel-300x199கோலாலம்பூர், டிசம்பர் 6 – நேற்று மாலையில் பத்திரிக்கை நண்பர் ஒருவர் தொலைபேசியில் என்னை அழைத்து, ‘சங்கப் பதிவிலாகா தனது முடிவை அறிவித்து கடிதம் ஒன்றை மஇகா தலைமையகம் அனுப்பி வைத்துவிட்டதாம். அதன் உள்ளடக்கம் என்னவென்று தெரிந்து கொள்ள முடியுமா என விசாரியுங்கள். தெரிந்தால் சொல்லுங்கள்” என்றார்.

அடுத்த ‘திக் திக்’ நிமிடங்களில் அங்கும் இங்குமாக சில விசாரிப்புகள் – என நண்பர்களை அழைத்ததில் ஒரு சிலர் இன்னும் தெரியவில்லை என்றனர். ஒரு சிலர் கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது உண்மை – உள்ளடக்கம் தெரியவில்லை என்றனர்.

மீண்டும் பத்திரிக்கை நண்பரை அடுத்த பத்து நிமிடங்களுக்குள் அழைத்தபோது அவர் மறு உறுதிப்படுத்தினார் – அனைத்துப் பதவிகளுக்கும் மஇகாவில் மறு தேர்தல் என்று!

#TamilSchoolmychoice

அவ்வளவு விரைவாக பரவத் தொடங்கியிருந்தது, மஇகாவில் மறு தேர்தல் என்ற செய்தி!

தேசிய முன்னணியில் மறு தேர்தல் நடைபெறும் முதல் கட்சி

மஇகாவில் மறுதேர்தல் என்ற செய்தி நாடு முழுமையிலும் இந்திய சமுதாயத்தில் பலத்த அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. தேசிய முன்னணி உறுப்பியக் கட்சி ஒன்றில் தேர்தல் முறைகேடுகள் என்ற குற்றச்சாட்டு எழுந்து அதன் காரணமாக மறு தேர்தல் நடப்பது அநேகமாக இதுதான் முதன்முறை எனக் கருதப்படுகின்றது.

Tun Mahathir Bin Mohamedகடந்த காலங்களில் தேர்தல் குறித்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாக மசீச போன்ற கட்சிகளில் மறுதேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.

1987ஆம் ஆண்டு அம்னோ தேசியத் தலைவருக்கான தேர்தலில் அன்றைய பிரதமர் டாக்டர் மகாதீருக்கும் துங்கு ரசாலிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்ற துங்கு ரசாலி நீதிமன்றத்தில் அம்னோ தேர்தல்கள் செல்லாது என வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

அந்த வழக்கின் காரணமாகத்தான் அம்னோவின் பதிவு ரத்தாகி, அம்னோ பாரு என்ற புதிய கட்சி தோற்றம் கண்டது. நாளடைவில் அம்னோ பாரு மீண்டும் அம்னோவானது. கால ஓட்டத்தில் துங்கு ரசாலியும் தனது அரசியல் போராட்டத்தில் சலிப்புற்று மீண்டும் மகாதீரோடும் அம்னோவோடும் ஐக்கியமானார்.

ஆனால், அந்த அம்னோ வழக்கின் நீதிமன்ற முடிவு காரணமாக, ஆத்திரமுற்ற மகாதீர் தனது ஆட்சிக் காலத்திலேயே, சங்கப் பதிவிலாகா சட்டங்களை மாற்றியமைத்தார். 1966ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவு சட்டம் 1987ஆம் ஆண்டில் நடைபெற்ற அம்னோ வழக்குக்குப் பின்னர்தான் திருத்தப்பட்டது.

அதன்படி, ஒரு கட்சியின் முடிவு குறித்தோ, அல்லது அந்தக் கட்சியின் தேர்தல்கள் குறித்தோ யாரும் நீதிமன்றம் செல்லமுடியாது. அந்தக் கட்சியின் உச்சமன்றத்தின் முடிவே இறுதியானது. அந்த முடிவில் அல்லது கட்சியின் மற்ற செயல்பாடுகளில் அதிருப்தி இருந்தால், கட்சியின் சங்கப் பதிவதிகாரிக்கு புகார் அனுப்பலாம் – அவரது முடிவே இறுதியானது!

இப்படியாக, காலம் காலமாக  நீதிமன்றத்தின் வசம் இருந்து வந்த இறுதி முடிவு எடுக்கும் நீதி பரிபாலன அதிகாரங்கள் ஒரேயடியாக – ஒரே நாளில் பறிக்கப்பட்டு – ஒரு சாதாரண அரசாங்க அதிகாரியின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டன.

MIC logoசங்கப் பதிவதிகாரி என்ற அரசாங்க அதிகாரியை பிரதமரோ – ஆளும் அரசாங்கமோ தனது கைக்குள் போட்டுக் கொண்டு எந்தக் கட்சியிலும் எத்தகைய முடிவையும் திணிக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவானது.

இதுதான் அரசியல் கட்சிகளின் இன்றைய யதார்த்த நிலை!

இதில் கொடுமை என்னவென்றால், தேச நிந்தனை சட்டம் என்றும், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்றும் வாய் கிழியப் பேசும் எதிர்க்கட்சிகள் கூட, நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்த சங்கங்களின் காலத்துக்கு ஒவ்வாத சட்டம் பற்றி வாய் திறப்பதில்லை.

காரணம், இந்த சட்டம் எப்படி அம்னோ போன்ற தேசிய முன்னணி கட்சிகளின் நடப்பு தலைமைத்துவங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றதோ, அதே போன்று சர்வாதிகார – தனி மனித தலைமைத்துவ பாணியில் நடத்தப்படும் – ஜசெக, பிகேஆர், பாஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் தலைமைத்துவங்களுக்கும் வசதியாக இருப்பதால் அந்தக் கட்சிகளின் தலைமைத்துவமும் இந்த சட்டங்கள் பற்றி வாய் திறப்பதில்லை.

1987ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்றப்பட்ட இந்த சட்டங்களின் படிதான் கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட ஜசெக தேர்தல் செல்லாது என சங்கப் பதிவதிகாரி அறிவித்து மீண்டும் மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டு, அதன்படியே மறுதேர்தலும் நடந்தது.

இப்போது மஇகாவிற்கும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பழனிவேலுவுக்கு பேரிடி

புகார் செய்த ஓராண்டுக்குப் பின்னர் சங்கப் பதிவிலாகா நடத்திய விசாரணைகளின்படி மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது கட்சியின் தேசியத் தலைவர் பழனிவேலுவுக்கு விழுந்திருக்கும் பேரிடியாகும்.

Palanivel MIC Presidentகாரணம், அவர்தான் கட்சியின் தேர்தல் குழுத் தலைவர். இதன் காரணமாக அவர் தேர்தலை முறைகேடாக நடத்தினார் என்பது சங்கப் பதிவதிகாரியின் முடிவின் படி தெளிவு படுத்தப்பட்டுவிட்டது.

அவர் பதவி விலக வேண்டுமென்ற அறைகூவல்கள் இனி இன்னும் அதிகரிக்கும். முறைப்படி பார்த்தால், சங்கப் பதிவதிகாரியின் முடிவுக்கு அவர்தான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.

அவ்வாறு செய்வாரா அல்லது அதனையும் தட்டிக் கழிப்பாரா என்பது அவர் நாடு திரும்பியதும்தான் தெளிவாகத் தெரிய வரும்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை சங்கப் பதிவதிகாரியும், சங்கங்களின் பதிவிலாகா கீழ் வரும் அமைச்சான உள்துறை அமைச்சின் அமைச்சர் அகமட் சாஹிட் ஹாமிடியும் பிரதமரைச் சந்தித்தனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.

தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் அதன் உறுப்பியக் கட்சியான மஇகாவுக்கு மறு தேர்தல் என்பது பிரதமரின் ஒப்புதலோடுதான் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

najibஇதனால், பிரதமரும் பழனிவேலுவின் தலைமைத்துவம் மீது அதிருப்தி கொண்டிருக்கின்றார் – பழனிவேலு பதவி விலகிச் செல்ல –  நெருக்கடி தரத் தொடங்கி விட்டார் என்பது தெளிவாகி விட்டது.

இவை எல்லாம் நடந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்பது போல் பழனிவேல் மீண்டும் எப்போதும் போல் மௌனம் காக்கலாம்!

ஆனால்,  அவரது தலைமைத்துவம் மஇகாவின் அனைத்து தரப்பினராலும், இந்திய சமுதாயம் மற்றும்  அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கேமரன் மலை வட்டாரம் என எல்லா நிலைகளிலும்  நிராகரிக்கப்பட்டு வருகின்றது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது.

பதவியேற்றது முதல் எந்தவித உருமாற்றத்தையும் கட்சிக்குள் கொண்டுவர முடியாமல்,

பதவியில் மட்டும் நீடித்துக் கொண்டிருக்கும் அவர்,

தனது பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டு, புதிய தேசியத் தலைவருக்கு அவர் வழிவிடுவதுதான் இந்த காலகட்டத்தில் அவர் எடுக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்பதுதான் மஇகாவில் பல தரப்புகளிலும் எழுந்துள்ள எதிர்பார்ப்பாகும்.

-இரா.முத்தரசன்