சென்னை, டிசம்பர் 6 – சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று அக்டோபர் 17-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 17-ஆம் தேதியை நோக்கித்தான் முழுக் காவனமும்.
ஏனெனில் அன்றைய தினத்துக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.
எனவே அது தொடர்பான செயல்பாடுகளில் கவனம் இருந்தாலும், கட்சியிலும் ஆட்சியிலும் சில அதிரடி உத்தரவுகளையும் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபைக்கு வருகிறார் என்றாலே அமைச்சர்கள் வரிசைகட்டி நின்று வரவேற்பார்கள்.
ஆனால் ஜெயலலிதா பதவியிழந்த பின்னர் கூடிய முதல் சட்டசபை கூட்டத்தொடரில் அத்தகைய நிகழ்வை காணமுடியவில்லை. சாதாரண சட்டசபையாகவே அது இருந்ததாம்.
முதல்வர் பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூட சட்டசபையில் அமைச்சர்களோடு அமைச்சராய்தான் அமர்ந்திருக்கிறார். சபையை எப்படி நடத்த வேண்டும், என்ன பேசவேண்டும் என்று ஆலோசனை கொடுத்து அனுப்பியிருந்தாலும் ஜெயலலிதா இல்லாத சட்டசபையில் அமைதியே நிலவியது.
ஆட்சியை மறைமுகமாக நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் இப்போதைய கவனம் எல்லாம் டிசம்பர் 17-ஆம் தேதியை நோக்கியே உள்ளது.
அதற்கு முன்புதான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கான மேல்முறையீட்டு மனுவை, அவர் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜாமீனில் வந்ததுமே தீர்ப்பின் நகலை 10-க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்களுக்குக் கொடுத்து அவர்களது ஆலோசனைகளை பெற்றுள்ளாராம் ஜெயலலிதா.
மேல்முறையீட்டு மனுவில் என்ன வாதங்களை வைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சொல்லியுள்ள ஆலோசனைப்படி மனு தயாராகியுள்ளது.
இதையொட்டி வழக்கறிஞர்களை மட்டுமே அவ்வப்போது சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. அது வரை வெளியில் கட்சி நிகழ்ச்சிகளில் முகத்தைக் காட்டும் திட்டம் அவருக்கு இல்லை என்கின்றனர் கட்சி உறுப்பினர்கள்.