புத்ராஜெயா, டிசம்பர் 9 – ஜனநாயகத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது எதிர்க் கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்துடனோ தேச நிந்தனைச் சட்டம் மீண்டும் நிலை நிறுத்தப்படவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வாழும் பல்வேறு இனத்தவர்கள் மற்றும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களிடையே எத்தகைய மோதல்களும் ஏற்படாமல் தடுக்கவே இச்சட்டம் நிலைநிறுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
“ஜனநாயகத்தைப் பின்பற்றாத, பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுக்கு மதிப்பளிக்காத சில பொறுப்பற்ற நபர்கள் இன்னும் உள்ளனர். இதனால் சமுதாயத்தில் தேவையற்ற பதற்றம் ஏற்படுகிறது,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலும் கூட இனப்பிரச்சினைகள் மற்றும் கலவரங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அதே போன்ற மோதல்கள் மலேசியாவில் ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
“எனவே நாம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேண வேண்டும். தேச பாதுகாப்புக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல் காரணமாக சட்டங்களை நம்மால் தளர்த்த இயலாது.
“தேச நிந்தனைச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது எதிர்க்கட்சிகளை ஒடுக்கவோ அல்ல. எதிர்க்கட்சிகள் எதையும் செய்யலாம், எத்தகைய கருத்துக்களையும் பரப்பி தங்களை வலுவாக்கிக் கொள்ளலாம் என்கிற சூழ்நிலையே இங்குள்ளது. அப்படியெனில் மலேசியாவில் ஜனநாயகம் புத்துணர்ச்சியுடன் உள்ளது என்றே அர்த்தம்,” என்று பிரதமர் நஜிப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.