சென்னை, டிசம்பர் 9 – இலங்கை அதிபர் ராஜபக்சே வழிபாட்டுக்காக திருப்பதிக்கு வரவிருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:- “இன்று (9-ஆம் தேதி) மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்”.
“எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிய ராஜபக்சே, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களை துயரத்துக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக்கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில்”,
“அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தன் இனவெறிக் கொடூரங்களை மறந்துவிட்டு சர்வசாதாரணமாக திருப்பதிக்கு வருவதும் போவதுமாக இருந்த ராஜபக்சே, இப்போதைய பாரதீய ஜனதா ஆட்சியிலும் அதே பயண நடவடிக்கைகளைத் தொடர்வது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கவலையாகத் தமிழ் மக்களை நோகடிக்கிறது”.
“ராஜபக்சேவை இனப் படுகொலையாளனாக அறிவிக்கக் கோரி தமிழ் மக்கள் மட்டும் அல்லாது உலக நாடுகள் பலவும் போராடிவரும் நிலையில், தொடர்ந்து இந்தியப் பேரரசு ராஜபக்சேயை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது தமிழ்த் தேசிய இனத்துக்கான துரோகம்”.
“இலங்கையில் இருந்த எங்கள் பாட்டன் சிவன் கோயிலையும், எங்கள் பாட்டன் முருகன் கோயிலையும் இடித்துத் தரைமட்டமாக்கிய இனவெறியன் ராஜபக்சே, தான் செய்த பாவங்களை எல்லாம் கழுவுவதற்காக திருப்பதி வழிபாட்டுக்கு வருகிறாரா?”
“ஆந்திராவை ஆளும் மதிப்புமிக்க சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தை உடனடியாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்களை உற்ற உறவுகளாக எண்ணி வாழ்பவர்கள் தமிழ் மக்கள்”.
“ஒருமித்த தேசத்தின் உறவுகளாகவும் அண்டை மாநில அன்பாகவும் இருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜபக்சே வருகைக்குத் தடை விதிக்க வேண்டும். மத்திய அரசும் ராஜபக்சேயின் வருகையைத் தமிழ் மக்களின் குரலாக நின்று தடுக்க வேண்டும்”.
“தமிழர்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி ராஜபக்சேயின் வருகைக்கு அனுமதி வழங்கப்படுமேயானால், சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட வெங்கடாஜலபதி கோயிலை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சி கடுமையான போராட்டத்தை நடத்தும்”.
“தமிழர்களின் மனதில் வன்மத்தை விதைக்கும் செயல்பாடுகளை மத்திய அரசு இனியாவது கைவிட வேண்டும் என்பதை அந்தப் போராட்டத்தில் உரக்க வலியுறுத்துவோம் என அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.