சென்னை : இதுவரையில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் நடிகர் விஜய் இப்போது அரசியலில் பரபரப்புச் செய்திகளின் நாயகனாகவும், அன்றாடம் ஊடகங்களில் அடிபடும் நபராகவும் மாறி உள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாட்டு உரையை ஒவ்வொரு வரிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து அந்த விவகாரம் தமிழக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து தினமும் ஏதாவது ஒரு செய்தி விஜய் குறித்து வெளியிடப்படுவது ஊடகங்களின் வழக்கமாகிவிட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற தவெக கட்சியின் செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகளை இந்த தீர்மானங்கள் தொட்டு பேசுகின்றன. மேலும் விஜய் தனது கட்சிக்கு என சொந்த தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை தொடங்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
தவெக கட்சியின் மற்றொரு தலைவர், சீமானுக்கு நாங்கள் பதில் சொல்லப் போவதில்லை – அவருக்கு பதில் சொல்வதனால் எங்களின் கவனத்தை திசை திருப்ப நாங்கள் விரும்பவில்லை – எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கு பங்கு வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என விஜய் கூறியிருப்பதும் பரபரப்பாக பேசப்படுகிறது. பல கட்சிகள் இந்த பரிந்துரையை வரவேற்பதாகக் கூறியிருக்கின்றன.
விஜய் பற்றி கட்சி நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைவர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்த தகவலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலம் 2026 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை நோக்கி அதிமுக – தவெக இரண்டும் நகர்கின்றன என்ற ஆரூடங்கள் வலுவடைந்து வருகின்றன.