நியூயார்க், டிசம்பர் 10 – அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் இதழ், 2014-ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளது.
டைம் இதழ், உலகின் சிறந்த மனிதர்களை தேர்வு செய்யும் இணைய வாக்கெடுப்பை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டிற்கான வாக்கெடுப்பு டைம் இதழின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. சுமார் 225 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அளித்த 5 மில்லியன் வாக்குகளின் அடிப்படையில் 16 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று, இந்த ஆண்டின் சிறந்த மனிதராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேர்வாகியுள்ளார்.
இது குறித்து டைம் இதழின் ஆசிரியர் குழு கூறியுள்ளதாவது:-
“இந்தியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில், நரேந்திர மோடி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். குறுகிய காலத்தில், அவரின் செயல்பாடுகள் பெரும்பான்மையானவர்களுக்கு திருப்தி அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து ஏராளமானோர் அவருக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்துள்ளனர். எனினும், அவரின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் பலர் அதிருப்தியும் அடைந்துள்ளனர்” என்று கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வாக வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஹாங்காங் போராட்டத் தலைவர் ஜோஷுவா வாங், நோபல் அமைதிப் பரிசை வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா, எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழு உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.