Home நாடு 7% இந்தியர்கள் 7 அரசியல் கட்சிகளாக சிதறிக் கிடக்கிறோம் – ஒன்றிணைய வேண்டும் -முருகையா வலியுறுத்து

7% இந்தியர்கள் 7 அரசியல் கட்சிகளாக சிதறிக் கிடக்கிறோம் – ஒன்றிணைய வேண்டும் -முருகையா வலியுறுத்து

650
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 10 – இந்தியர்கள் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களாக பிரிந்து, சிதறிக் கிடப்பதால் இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை எழுகின்றது  என முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அனைத்து இயக்கங்களும் இனி ஒரே குடையின் கீழ் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என அவர் கூறியுள்ளார்.

Murugiah Dato 600 x 400
டத்தோ டி.முருகையா

“இந்நாட்டில் சிறுபான்மை சமுதாயமாக நாம் உள்ளோம். இந்நிலையில் இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலத்தை நினைக்கும்போது கவலையும் வருத்தமும் ஏற்படுகிறது. நம்மை மற்றவர்கள் பிளவுபடுத்தி ஆள்வதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மலாய்ச் சமூகத்திற்கு அம்னோ, பாஸ் என இரு அரசியல் கட்சிகள் மட்டுமே உள்ளன. கெ அடிலானில் பல இனத்தவர்களும் உள்ளனர். இதேபோல் சீன சமுதாயத்திற்கு என மசீச, ஐசெக ஆகிய இரு கட்சிகள் உள்ளன” என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“அம்னோ மீது அதிருப்தி கொள்ளும் மலாய்க்காரர்கள் பாஸ் அல்லது கெ அடிலான் கட்சியில் இணைகிறார்கள். இதேபோல் மசீச மீது அதிருப்தி கொள்ளும் சீனர்கள் ஐசெகவிற்குச் செல்கிறார்கள். ஆனால் இந்தியச் சமூகத்திற்கு என நிறைய கட்சிகள் உள்ளன,” என்று முருகையா குறிப்பிட்டார்.

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7 விழுக்காடு மட்டுமே உள்ள இந்தியர்களுக்கு என மஇகா, பிபிபி, ஐபிஎப், மக்கள் சக்தி, மலேசிய இந்தியர் ஒற்றுமை கட்சி ஆகிய கட்சிகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கெ அடிலான் மற்றும் ஐசெகவிலும் கணிசமான இந்தியர்கள் உறுப்பினர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியச் சமுதாயம் 7 அரசியல் கட்சிகளாக பிளவுபட்டுக் கிடப்பது தெளிவாகத் தெரிகிறது என அவர் கூறியுள்ளார். மேலும் தெலுங்கு சங்கம், மலையாளிகள் சங்கம், சீக்கியர்கள், வட இந்திய சங்கம், இலங்கை தமிழ்ச் சங்கம் உட்பட பல்வேறு சாதி சங்கங்களும் நம்மிடையே இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“மலேசிய இந்தியர்களின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அனைவருமே இந்தியர்கள் என்று உணர்வுடன் ஒன்றுபட வேண்டுமே தவிர அரசியல் சித்தாந்தங்கள் நம்மை இணைக்கக் கூடாது. மலேசிய இந்தியர்கள் இந்த கோணத்தில் சிந்தித்து ஒன்றுபட வேண்டும். அனைத்து இந்தியக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஆற்றல்மிக்க தலைவர் நமக்கு கிடைப்பார் என நம்புவோம்,” என்று முருகையா மேலும் தெரிவித்துள்ளார்.