கோலாலம்பூர், டிசம்பர் 10 – மலிவு விலையில் விமானங்களை இயக்கும் சிறந்த நிறுவனமாக அனைத்துலக அளவில் மீண்டும் விருது பெற்றுள்ளது ஏர் ஆசியா.
ஆங்குயிலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘அனைத்துலக பயண விருதளிப்பு விழா’வில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அந்நிறுவனத்திற்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
அனைத்துலக பயண விருதுகள் என்பது பயணத்துறையில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதாக கருதப்படுகிறது.
ஏர் பெர்லின், ஈசி ஜெட், ஃப்ளை துபாய், ஜெட் ப்ளூ, ஜெட் ஸ்டார் ஏர்வேஸ், குலுலா, மேங்கோ உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு மத்தியில் ஏர் ஆசியாவுக்கு இந்த பெருமைமிகு விருது கிடைத்துள்ளது.
ஏர் ஆசியாவின் செயல்முறைத் தலைவர் டத்தோ கமாருடின் மேரானுன் இந்த விருதளிப்பு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெறுவது பெருமை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“ஏர் ஆசியா ஊழியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் உருவாக்கத்திறன் ஆகியவை இன்றி இந்த விருது சாத்தியமாகி இருக்காது. உலக வரைபடத்தில் ஏர் ஆசியா இடம்பெறும் வகையில், நிறுவனத்தின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது,” என்றார் கமாருடின் மேரானுன்.