புது டெல்லி, டிசம்பர் 10 – ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையில் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள செக் குடியரசு போர்ச்சுகல், எஸ்தானியா, பல்கேரியா, போலந்து, இலக்சம்பெர்க், லத்தீவியா போன்ற நாடுகளின் தூதர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை சந்தித்தார்.
இரு தரப்பிலும் வர்த்தக, கலாச்சார, அரசியல் உறவுகளைப் பற்றிப் பேசினார்கள். வைகோ, தமிழக அரசியல் – தேசிய அரசியல் நிலை குறித்தும், ஈழத் தமிழர்கள் சந்தித்து வருகின்ற பிரச்சனைகள் குறித்தும், ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்கி விவரித்துப் பேசினார்.ஈழத்தமிழர் பிரச்சனையில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளின் உதவியும், பங்களிப்பும் மிக அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாட்டுத் தூதுவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம், என வைகோ ஆற்றிய பிரகடன பதிவு அடங்கிய ஒளி நாடா, மலேசியா நாட்டின் பினாங்கு நகரில் நிறைவேற்றப்பட்ட பினாங்கு பிரகடனத்தின் ஆங்கிலப் பிரதியையும் அனைவருக்கும் வைகோ வழங்கினார்.