ஓஸ்லோ, டிசம்பர் 10 – அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகள் வழங்கப்படும் நிகழ்வு இன்று நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெறுகின்றது. பரிசு பெறுபவர்கள் ஓஸ்லோ நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
குழந்தைகள் நல உரிமைக்காக போராடிவரும் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பெண் கல்விக்காக போராடிவரும் பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
இவர்கள் உள்பட 11 பேருக்கு 2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றன.
சுவீடனில் பிறந்த ஆராய்ச்சியாளரும், மிகப் பெரிய தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தன்னுடைய மறைவுக்குப் பிறகு, மிகச் சிறந்த நிபுணர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று நோபல் தனது உயிலில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, கடந்த 1901ம் ஆண்டு முதல் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதி இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
முதலில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய பிரிவுகளுக்கான விருதுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும், அமைதிக்காக நோபல் பரிசு நார்வேயின் ஓஸ்லோ நகரிலும் வழங்கப்பட்டு வருகிறது.
1968ம் ஆண்டு சுவீடன் மத்திய வங்கி பொருளாதாரத்துக்கான நோபலையும் சேர்த்தது. அதைத் தொடர்ந்து 1969ம் ஆண்டு முதல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது.
ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில், நோபல் விருதுகளை சுவீடனின் அரசர் கார்ல் அளிக்கிறார். சுவீடன் அரசர் பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்குவார். அதைத் தொடர்ந்து நடைபெறும் விருந்தில், 250 மாணவர்கள் உள்பட 1,300 பேர் கலந்து கொள்வார்கள்.
ஓஸ்லோவில் நடைபெறும் விழாவில் அமைதிக்காக நோபல் பரிசை, நார்வே நோபல் குழுவின் தலைவர் வழங்குவார். இந்த விழாவில் அரசர் 5வது ஹரால்டு, அரசி சோன்ஜா, உயர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
படங்கள் : EPA