Home One Line P2 நோபல் பரிசைப் பெறும் இன்னொரு இந்தியர் அபிஜித் பானர்ஜி – மனைவிக்கும் நோபல் பரிசு

நோபல் பரிசைப் பெறும் இன்னொரு இந்தியர் அபிஜித் பானர்ஜி – மனைவிக்கும் நோபல் பரிசு

1398
0
SHARE
Ad

ஸ்டாக்ஹோம் – இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் மூவரில் ஒருவரான அபிஜித் பானர்ஜி நோபல் பரிசைப் பெறும் இந்தியர்களின் வரிசையில் சேருகிறார்.

ஏற்கனவே, சி.வி.இராமன், ரவீந்திரநாத் தாகூர், அமர்த்தியா சென், சுப்பிரமணியம் சந்திரசேகர், வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் என பல இந்தியர்கள் இதுவரையில் நோபல் பரிசை பல்வேறு துறைகளில் பெற்றிருக்கின்றனர். 2019-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் துறை நோபல் பரிசைப் பெறும் அபிஜித் இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது இந்தியராவார். ஏற்கனவே பொருளாதாரத் துறையில் அமர்த்தியா சென் நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்.

கல்கத்தா பல்கலைக் கழகத்தில் படித்த வங்காள இனத்தவரான அபிஜித் அதன் பின்னர் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் படித்து அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டப் படிப்பை 1988-இல் முடித்தார். தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

ஏழ்மையை ஒழிப்பதற்கான அவரது ஆராய்ச்சிகள்தான் அவரை நோபல் பரிசுக்குத் தேர்வு செய்துள்ளன.

அபிஜித்தின் தந்தையும், தாயாரும் கூட பொருளாதாரத் துறை பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் ஆவர்.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் அபிஜித்துடன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் மூவரில் ஒருவரான எஸ்தர் டப்லோ அபிஜித்தின் மனைவியாவார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான இவர் அபிஜித்துடன் இணைந்து பல பொருளாதார ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெறும் இரண்டாவது பெண்மணி எஸ்தர் ஆவார். 46 வயதான எஸ்தர், பொருளாதாரப் பிரிவில் நோபல் பரிசை இதுவரை பெற்றவர்களில் ஆகக் குறைந்த வயதுடையவர் ஆவார்.