மும்பை – மலேசியாவின் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் சுத்திகரிப்பு ஆலைகள் எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குத் தேவையான செம்பனை எண்ணெயை வாங்குவதை நிறுத்தியுள்ளன. இதற்குக் காரணம் இந்திய அரசாங்கம் மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் செம்பனை எண்ணெய் மீது இறக்குமதி வரிகளை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புதான் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2019-ஆம் ஆண்டில் மலேசிய செம்பனை எண்ணையை உலகிலேயே அதிக அளவில் வாங்கியிருக்கும் நாடு இந்தியா. செம்பனை எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைத்துக் கொண்டால், அதன் மூலம் மலேசிய செம்பனை எண்ணெயின் விலைகள் வீழ்ச்சி அடையலாம் என்பதோடு, இந்தியாவுக்கான ஏற்றுமதியை இந்தோனிசியா அதிகரிக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்கும் மலேசியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா, மலேசியாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி அளவைக் குறைக்கும் வியூகத்தைக் கையாளும் என ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் வரையிலான இந்தியாவுக்கான செம்பனை எண்ணெய் விநியோகம் குறித்த ஒப்பந்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் இனி நவம்பர், டிசம்பர் மாத விநியோகத்திற்கான புதிய ஒப்பந்தங்களைச் செய்வதற்கு இந்திய வணிகர்கள் பின்வாங்கத் தொடங்கியுள்ளனர். பலர் இன்னும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல் தவிர்த்து வருகின்றனர்.
இதனால் நவம்பர் தொடங்கி இந்தியாவுக்கான மலேசிய செம்பனை எண்ணெயின் இறக்குமதி அளவு கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.