ஐதராபாத், டிசம்பர் 10 – நேற்று ஐதராபாத்தில் நடந்த ‘லிங்கா’ பட இசை நிகழ்ச்சியில் ‘60 வயதுக்கு மேல் டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை’ என கூறியுள்ளார் ரஜினி.
விழாவில் ரஜினி பேசியதாவது: ” எனக்கும் இது சவாலான படம். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்”.
“சோனாக்ஷி சின்ஹாவை சிறு வயதிலேயே தெரியும். என் மகள்களுடன் வளர்ந்தவர். அவரோடு காதல் டூயட் பாட வேண்டும் என்றதும் வெட வெடத்து போனேன். நான் அறிமுகமான முதல் படமான ’அபூர்வ ராகங்கள்’ படத்தில் கூட இப்படி ஆனது இல்லை”.
“அவரோடு சேர்ந்து ஆட ரொம்ப சிரமப்பட்டேன். அவருக்கு இணையாக என் தோற்றத்தை மாற்ற தொழில் நுட்ப குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர். அறுபது வயதைக் கடந்த என்னை இப்படி டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த மிகப் பெரிய தண்டனை”.
“ஓடும் ரயிலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையெல்லாம் விட சோனாக்ஷியுடன் டூயட் பாடுவது சிரமமாக இருந்தது. இவ்வளவுக்கும் நடுவில் திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ்.ரவிகுமாரை பாராட்டுகிறேன்”.
“ஹாலிவுட்டிலும் இது போன்ற பிரமாண்ட படங்கள் நிறைய வருகின்றன. அவற்றை முடிக்க நிறைய காலம் எடுக்கிறார்கள். தெலுங்கில் தயாராகும் படத்தை அவற்றோடு ஒப்பிடக் கூடாது”.
“அது வேறு மாதிரி கதை. அப்படத்தை இயக்கும் ராஜாமௌலி சிறந்த இயக்குனர். அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றார் ரஜினி.