ஜெருசலம், டிசம்பர் 11 – பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதியில், அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவரை இஸ்ரேல் இராணுவம் அடித்துக் கொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தினை ரஷ்யா தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியதால், இஸ்ரேல் இராணுவத்தின் கொடூரச் செயல் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன அமைச்சர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த புகைப்படத்தைக் காட்டி விளக்கமளிக்கும் பாலஸ்தீன அதிபர் முகமட் அப்பாஸ். நேற்று மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகரில் நடைபெற்ற சிறப்பு தலைமைத்துவ கூட்டத்தின்போது முகமட் அப்பாஸ் நடந்த சம்பவத்தை விவரித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரையில் ரமல்லாஹ் பகுதிக்கு அருகில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்று வரும் இரு நாட்டவர்களுக்கு இடையிலான போராட்டத்தை பாலஸ்தீனத்தின் மூத்த அமைச்சர் ஜையாத் அபு இன் நேற்று பார்வையிட சென்றிருந்தார். அப்போது இஸ்ரேல் இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் அவரை வரவிடாமல் தடுத்தனர்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி அப்பகுதிக்கு செல்ல முயன்ற அமைச்சரை, இஸ்ரேல் இராணுவத்தினர் அடித்து உதைத்தனர். துப்பாக்கியின் மறு முனையால் அமைச்சரின் நெஞ்சில் குத்தினர். இதில் படுகாயமடைந்து அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் ரமல்லாஹ் நகருக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. தங்கள் நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள, இந்த சம்பவம் பாலஸ்தீனத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த அமைச்சர் ஜையாத் அபு இன், கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிபர் மெகமூத் அப்பாஸ், இதற்கு இஸ்ரேல் இராணுவம் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். அதே நேரம், இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இது குறித்த காணொளியைக் கீழே காண்க: