பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 11 – மலாயாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் இரு தலைவர்கள் அந்த பல்கலைக் கழகத்தால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததன் எதிரொலியாக அவர்கள் மீது இந்நடவடிக்கை பாய்ந்துள்ளது.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மலாயாப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் இக்குறிப்பிட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. எனினும் பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதையும் மீறி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக வந்த அன்வார், தடையை மீறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தார்.
இந்நிலையில் ஃபஹ்மி சய்னோல், சாஃப்பான் சம்சுடீன் ஆகிய இருவருக்கும் 2 பருவத் தேர்வு காலத்திற்கு (செமஸ்டர்) தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இச்சம்பவம் தொடர்பில் 8 மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தியதாக பல்கலைக்கழக ஊடகத் தொடர்பு பிரிவு தலைவர் ஈசாட் சல்மான் தெரிவித்தார்.
மேலும் 4 மாணவர்களுக்குத் தலா 150 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மாணவர்கள் மீதான இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு பிகேஆர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.