கோலாலம்பூர், டிசம்பர் 11 – உத்துசான் மலேசியா மலாய் பத்திரிகைக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் ஐசெக ஆலோசகர் லிம் கிட் சியாங். கடந்தாண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அப்பத்திரிகை வெளியிட்ட ஒரு கட்டுரை தொடர்பில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் லிம் கிட் சியாங் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் லிம் கிட் சியாங் தரப்பில் முன்வைக்கப்பட்ட அவதூறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி இயோ வீ சியாம் தெரிவித்துள்ளார்.
“எனவே பிரதிவாதி (உத்துசான்) 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் தொகையை வாதிக்கு ஏற்பட்டுள்ள இழப்பின் பொருட்டு அளிக்க வேண்டும்,” என்று நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார்.
ஐசெகவின் மத்திய செயலவை தேர்தலை தனது விருப்பத்திற்கேற்ப கையாண்டதாக உத்துசானில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக தனது அரசியல் வாழ்க்கைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் லிம் கிட் சியாங் குற்றம்சாட்டி இருந்தார்.
தலைவராக இருக்க தனக்கு தகுதியில்லை என்கிற தொனியில் அக்கட்டுரை அமைந்துள்ளதாகவும், ஐசெகவின் சட்டவிதிமுறைகளை தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறி லிம் கிட் சியாங் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது இந்த அவதூறு வழக்கில் அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது.