Home நாடு மறு தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்: டாக்டர் சுப்ரா

மறு தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்: டாக்டர் சுப்ரா

501
0
SHARE
Ad
SUBRA
டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்

புத்ராஜெயா, டிசம்பர் 11 – மஇகா மறுதேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். புத்ரா ஜெயாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்கங்களின் பதிவதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவின் பேரில் உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படும் என்றார்.

“கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ  பழனிவேல் தற்போது அரசு முறைப் பயணமாக வெளிநாட்டில் உள்ளார். அவர் அடுத்த வாரம் நாடு திரும்புகிறார்.  அடுத்த வாரம் தலைவரை சந்தித்துப் பேசிய பின்னர் மறுதேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்படும். இச்சமயம் கட்சி உறுப்பினர்கள் யாரும் உணர்ச்சிவசப்படக் கூடாது. சங்கங்களின் பதிவிலாகா பிறப்பித்துள்ள உத்தரவை மதித்துச் செயல்பட வேண்டும்,” என்றார் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.

கடந்த வெள்ளிக்கிழமை மஇகா உதவித் தலைவர்கள் பதவி மற்றும் மத்திய செயலவைக்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

நாடு திரும்பியவுடன் சங்கப் பதிவதிகாரி கடிதம் குறித்து இறுதி முடிவெடுப்பேன் என வெளிநாட்டிலிருந்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இணைய செய்தி ஊடகம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் மஇகா மறுதேர்தல் குழப்பத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சியின் தேசியத் தலைவர் பதவி விலக வேண்டுமென்றும், நடக்கவிருக்கும் கட்சித் தேர்தலை முன்னின்று நடத்த புதிய சுயேச்சை குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தார்.