புதுடெல்லி, டிசம்பர் 10 – சன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், சுமார் 1800 உள்நாட்டு விமான சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
பொருளாதார இழப்புகள் மற்றும் தொடர்ச்சியான விமானப் பயணங்கள் ரத்து போன்ற காரணங்களால் ஸ்பைஸ் ஜெட்டின் 186 வழித்தடங்களை ரத்து செய்வதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தது.
மேலும், ஒரு மாதத்திற்கு மேல் செல்லும் முன்பதிவுகளை எடுத்து கொள்ளக் கூடாது என்றும், இதில் பாதிப்படைந்த பயணிகளுக்கு 30 நாட்களுக்குள் கட்டணங்களை திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதன் காரணமாக ஸ்பைஸ் ஜெட், இம்மாதம் 31-ம் தேதி வரை 1861 உள்நாட்டு விமான சேவையை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தது. இதில் 81 விமான சேவைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன.
ஸ்பைஸ் ஜெட்டின் வீழ்ச்சி குறித்து வணிக வல்லுனர்கள் கூறுகையில், “ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தற்பொழுது மீட்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையெனில், கிங்பிஷேர் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலை, விரைவில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கும் ஏற்படும்” என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் தொடர்ச்சியாக உள்நாட்டு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறுகையில், “இந்தியாவில் தொடர்ச்சியாக உள்நாட்டு சேவை பாதிப்படைந்து வருகின்றது. பொது நிறுவனங்கள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களும் பாதிப்படைவது கவலை அளிக்கின்றது”என்று அவர் கூறியுள்ளார்.