கோலாலம்பூர், டிசம்பர் 12 – 2015-ம் ஆண்டில் உலக விமான நிறுவனங்கள், எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும், அதிக உள்நாட்டு உற்பத்தியாலும் சுமார் 25 பில்லியன் டாலர்கள் அளவிலான இலாபத்தைப் பெற வாய்ப்புள்ளதாக அனைத்துலக விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
2015-ம் ஆண்டிற்கான உலக விமான நிறுவனங்களின் இலாபம் குறித்து ஆய்வு நிறுவனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வறிக்கைகளை வெளியிட்டு இருந்தன. அதில் அடுத்த ஆண்டு அனைத்து விமான நிறுவனங்களின் நிகர இலாபம் 19.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருந்தது. எனினும், தற்போது அந்த ஆய்வு மறு மதிப்பீடு செய்யப்பட்டு, நிகர இலாபம் 25 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்துலக விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டோனி டெய்லர் கூறுகையில், “எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி, உலக பொருளாதாரத்தை முன்னேற்றி உள்ளது. விமான நிறுவனங்களும் அடுத்த ஆண்டு எதிர்பார்க்காத அளவில் இலாபத்தை ஈட்ட உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
எண்ணெய்யில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, 2015-ல் ப்ரெண்ட் எண்ணெய் விலை, பேரல் ஒன்றுக்கு 85 டாலர்களாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்துலக விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பிரைன் பியர்ஸ் கூறுகையில், “விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் மொத்த எண்ணெய் விலையில், பெரும் மாற்றங்கள் ஏற்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
நிகர இலாபத்தில் ஏற்பட இருக்கும் பெரும் முன்னேற்றம், பயணிகளின் விமான போக்குவரத்து அதிகரிப்பு ஆகிய காரணங்களால் விமான நிறுவனங்கள், விரைவில் அதிரடியான கட்டண சலுகைகளை அறிவிக்கும் என்று அனைத்துலக விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.