சண்டிகார், பிப்.27- ரயில்வே வரவு செலவில், ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சாலின் சொந்த தொகுதிக்கு, பல சலுகைகள் கிடைத்துள்ளன.
ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால், சண்டிகார் லோக்சபா தொகுதியிலிருந்து, காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின், பொதுவான தலைநகரமாக, சண்டிகார் உள்ளது. ரயில்வே அமைச்சர், பவன் குமார் பன்சால், நேற்று தாக்கல் செய்த வரவு செலவில் , இந்த இரண்டு மாநிலங்களுக்கும், கணிசமான சலுகைகள் கிடைத்துள்ளன.
நவீன குறி ( சிக்னல்) தொழில் நுட்ப வசதி, ஐந்து புதிய ரயில் பாதைகள், 10 புதிய ரயில்கள், ஒரு புதிய பயணிகள் ரயில், ஆகியவற்றுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவைதவிர, இந்த இரண்டு மாநிலங்களிலும், ஐந்து ரயில்களின் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நான்கு ரயில் பாதைகளை, மின் மயமாக்குவதற்கான அறிவிப்பும், நேற்று வெளியிடப்பட்டது. இரண்டு புதிய ரயில் பாதைகளை அமைப்பதற்கான ஆய்வுகள், வரும், மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என்றும், நேற்றைய வரவு செல்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்சால், ரயில்வே அமைச்சராக பதவியேற்ற, குறுகிய காலத்துக்குள்ளேயே, சண்டிகார்-டில்லி இடையே, மூன்று சதாப்தி ரயில்கள், புதிதாக இயக்கப்பட்டுள்ளன.
ரயில்வே துறைக்கு, கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, வரும் நிதியாண்டில், வெளிச் சந்தையில், 15 ஆயிரத்து, 103 கோடி ரூபாய் கடன் வாங்க, திட்டமிட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் வாங்கிய கடனை விட, அதிகம்.