புதுடெல்லி, பிப்.27- சேது சமுத்திரம் திட்டத்துக்காக ராமர் பாலம் இடிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா (பா.ஜ.) கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக பா.ஜ எம்.பி.க்கள் பிரச்னை எழுப்பினர்.
பா.ஜ. எம்.பி பிரகாஷ் ஜாவேத்கர் பேசுகையில், ராமர் பாலம் பாதிக்காத வகையில் புதிய பாதையில் சேது சமுத்திரம் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று பச்சோரி குழு அறிக்கை அளித்துள்ளது.
ஆனால், இந்த திட்டத்துக்காக ராமர் சேது உடைக்கப்படும் என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மக்களின் மத நம்பிக்கை மற்றும் புராதன சின்னமான ராமர் சேதுவை பாதுகாக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அரசு திரும்பப்பெற வேண்டும் என்றார்.
அப்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில், ஓட்டுக்காக சேது சமுத்திர திட்டத்தில் பாஜ அரசியல் செய்கிறது என்று கூறினார்.
இதை தொடர்ந்து ஆவேசம் அடைந்த பா.ஜ எம்.பி.க்கள், அவையின் மைய பகுதிக்கு வந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறு என்று கோஷமிட்டனர்.
அப்போது, திமுக, அதிமுக எம்.பி.க்களும் கோஷம் போட்டனர். இதனால், அவையில் அமளி நிலவியது. இதை தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.