பேங்காக், டிசம்பர் 13 – நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், அதில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் மீது ஒரு பயணி சுடுநீரை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாங்காக்கில் இருந்து நாஞ்சிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த தாய் ஏர் ஆசியா விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து அந்த விமானத்தை (chartered flight) மீண்டும் வந்த வழியே திருப்பி, பாங்காக்கில் தரை இறக்கினார் விமானி. பின்னர் சுடுநீர் வீசிய பயணியையும் அவருடன் வந்த மேலும் 3 பேரையும் விமானத்திலிருந்து இறங்குமாறு அவர் கூறினார்.
சுடுநீர் வீச்சால் காயமடைந்த அந்த விமானப் பணிப்பெண்ணுக்கு சக ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததாக அந்த விமான நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இச்சம்பவம் குறித்து விமான நிலைய அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய விமானியும் அவரது குழுவினரும், அக்குறிப்பிட்ட சீனப் பயணியின் செயல் விமானப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்த ஒன்று என்று தெரிவித்துள்ளனர். எனினும் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டதாக விமான நிறுவன செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
விமானப் பணிப்பெண் மீது நூடுல்ஸ் மற்றும் சுடுநீரும் சேர்ந்து வீசப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடுவானில் பறக்கும் விமானத்தில் ஒரு பயணி எழுந்து நின்று பேசுவது போன்ற ஒரு காணொளிக் காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ள சீன தேசிய வானொலி, அந்நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் விமான நிறுவனம் அத்தகைய மிரட்டல் எதுவும் விடுக்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும் பிரச்சினை ஏற்படுத்திய பயணி உள்ளிட்ட மேலும் மூவர், விமானத்திற்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாகவும் குறித்த நேரத்தைக் காட்டிலும் 5 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.