Home உலகம் குழந்தைக்காக சிகிச்சை பெறாமல் உயிர்நீத்த புற்றுநோயாளி தாய்

குழந்தைக்காக சிகிச்சை பெறாமல் உயிர்நீத்த புற்றுநோயாளி தாய்

637
0
SHARE
Ad

பெய்ஜிங், டிசம்பர் 13 – புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை பெற்றால் தன் வயிற்றில் சுமந்த சிசுவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அச்சிகிச்சையை மறுத்துள்ளார் சீன இளம்பெண் ஒருவர்.

அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான கியூ யுவான் யுவான் என்ற அந்த 26 வயது இளம் பெண் தனது குழந்தையைப் பிரசவித்த 100வது நாளில் புற்றுநோயின் தீவிரத்தால் உயிர் இழந்துள்ளார்.

Qiu Yuanyuan Cancer patient dies after delivering baby
கியூ யுவான் யுவான் மரணத்திற்கு முன்பு எடுத்த படம்

அவரது தாய்மையின் மேன்மை போற்றப்படும் அதே வேளையில், சீனாவில் அவர் செய்துள்ள இத்தியாகம் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

#TamilSchoolmychoice

சீனாவின் நட்பு ஊடக வலைதளமான சீனா வெய்போவில் (Sina Weibo) இது தொடர்பாக சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். அதில் பலர் கியூ யுவான் யுவான் எதற்காக தனது வாழ்க்கையை இவ்வாறு தியாகம் செய்ய வேண்டும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“தாயின் அன்பு மகத்தானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் அதற்காக உயிரை விடுவது சரியல்ல,” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“ஏதும் அறியாத ஒரு பிஞ்சை இந்த உலகத்தில் தனியாக விட்டுச்சென்ற இரக்கமற்ற தாய்” என்று ஒருவர் கியூவை சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார்.

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் அழகான விஷயம்தான். எனினும் அது உண்மையான தாயின் அன்பு கிடைக்காமல் நிகழும்போது அதை அழகான விஷயம் என்று சொல்ல முடியாது,” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் கியூ தாய்மை அடைந்திருப்பது தெரிய வந்தது. எனினும் அவரது மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. பரிசோதனையின்போது அவருடைய கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால், தான் வயிற்றில் சுமக்கும் சிசுவுக்கு இச்சிகிச்சை காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று கருதிய கியூ, தனக்கு அளிக்கப்பட்ட அனைத்து வகை சிகிச்சைகளையும் நிறுத்தச் சொல்லிவிட்டார்.

இதன் காரணமாக புற்றுநோய் அவரது உடலில் வேகமாகப் பரவியதை மருத்துவர்களால் தடுக்க முடியவில்லை. எனினும் இதற்காக கியூ கவலைப்படவில்லை.

கடந்த செப்டம்பரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. நியான் நியான் என்று பெயர் சூட்டப்பட்ட அக்குழந்தையின் 100ஆவது நாளை குடும்பத்தார் உற்சாகமாகக் கொண்டாடிய வேளையில், கியூ தனது இறுதி மூச்சை சுவாசித்து, நிரந்தரமாகக் கண் மூடினார்.

தாய்மையும் பெண்மையும் ஏன் போற்றப்படுகிறது என்பதற்கான காரணத்தை இந்த உலகத்திற்கு மீண்டும் அழுத்தமாக புரிய வைத்துச் சென்றிருக்கிறார் கியூ.