ஜாகர்த்தா, டிசம்பர் 14 – இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 108 வீடுகள் நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட நிலையில் மேலும் 100க்கும் மேற்ப்பட்டவர்களைக் காணவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய ஜாவாவில் அமைந்துள்ள பஞ்சார் நெகாராவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சேரும் சகதியுமாய் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தின் காரணமாகவே இந்த நிலச்சரிவு வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டுள்ளது என்றும், வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் இப்பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் முகைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ கூறுகையில், இதுவரை 379 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“ஜம்ப்ளுங் கிராமம்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் படையினர் அங்கு மேலும் பலரைத் தேடி வருகின்றனர். மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் பாதையும் நிலச்சரிவால் சேதம் அடைந்துள்ளது. எனவே மீட்புப்பணி சவால்கள் நிறைந்ததாக உள்ளது,” என்று சுடோபோ புர்வோ மேலும் தெரிவித்துள்ளார்.
படங்கள்: EPA