Home நாடு அஸ்ட்ரோ வானவில் சூப்பர் ஸ்டார் : மூத்த கலைஞர்களை மட்டம் தட்டி விமர்சிப்பது முறையா?

அஸ்ட்ரோ வானவில் சூப்பர் ஸ்டார் : மூத்த கலைஞர்களை மட்டம் தட்டி விமர்சிப்பது முறையா?

608
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 15 – கடந்த சில வாரங்களாக நம் நாட்டுப் பாடகர்கள் பங்கேற்கும் போட்டி நிகழ்ச்சி வானவில் சூப்பர் ஸ்டார் விண்மீன் துல்லிய (எச்.டி) அலைவரிசையில் இடம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் ரசிகர்களுக்கு மாறுதல்களைத் தர வேண்டும் என்ற நோக்கில், புதிய கலைஞர்களும், பழைய பண்பட்ட கலைஞர்களும் இணைந்து குழுவாகப் போட்டியிடும் நடைமுறையில் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

L.R.Eswary Singer
எல்.ஆர்.ஈஸ்வரி

நடுவர்களாக தலை சிறந்த தமிழகப் பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி, இசையமைப்பாளர் சி.சுந்தர் (பாபு) மற்றும் பாடகர் பிரசன்னா ஆகியோர்  அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

எல்.ஆர். ஈஸ்வரியின் கடுமையான விமர்சனம்

#TamilSchoolmychoice

எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் குரலில் வந்த எத்தனையோ பாடல்கள் இன்றும் வயதானவர்களைக் கூட,  எழுந்து ஆட வைக்கும் வசீகரமான தன்மை  வாய்ந்தவை. அவரது குரல் மற்றும் பாடல் திறன் குறித்து விவரிக்க வேண்டியதில்லை.

அவர் நடுவராக தனது கருத்துகளைக் கூறி பாடகர்களை மெருகேற்றுவது பாடகர்களுக்குக் கிடைத்த சிறந்ததொரு வரப்பிரசாதமாகும். உச்சரிப்பைப் பற்றி அவர் கூறும் கருத்துகள் நம் பாடகர்களுக்கு நூறு சதவீதம் பொருத்தமே.

முன்னுக்குப் பின் முரணான விமர்சனங்களும் மதிப்பெண்களும்

ஆனால், அதற்காக நாம் எல்லாரும் பல காலம் நன்கு அறிந்த சிவகுரு, டி.எம்.எஸ்.குணா போன்ற மூத்த பாடகர்களை, நமது நாட்டில் நெடுங்காலமாக கலைச் சேவை ஆற்றி வரும் மூத்த கலைஞர்களை – அறிவுரை என்ற பெயரில் கடுமையாக விமர்சிப்பது – சில சமயங்களில் மட்டம் தட்டுவது – பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதில் சில சமயம் நிகழ்ச்சியை வழிநடத்தும் அறிவிப்பாளர்கள் வேறு ஈஸ்வரி அம்மாவின் மனதில் பட்டதை சொல்லும் விமர்சனத்தால் நிகழ்ச்சியே பரபரப்பாக உள்ளது என்ற பாராட்டுமழை வேறு பொழிகின்றார்கள்.

இப்படிப்பட்ட பரபரப்பு தேவையில்லை. மிகச் சிறந்த பாடகியான அவர் தனது கருத்துகளை பாடுபவர் மனம் புண்படாவண்ணம் செய்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

குறிப்பாக இளம் பாடகர்களை சற்று கடுமையாக விமர்சிக்கலாம். தவறில்லை. ஆனால், நமது மூத்த கலைஞர்கள் யார் யார், காலமெல்லாம் வருமானத்தையோ, தொலைக்காட்சி புகழையோ எதிர்பார்க்காமல் அவர்கள் வழங்கியிருக்கும் சேவைகள் என்ன என்பது போன்ற விவரங்கள் எல்.ஆர்.ஈஸ்வரியிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மூத்த பாடகர்களும் பங்கு பெற வேண்டும் என்ற பாடல் திறன் போட்டியின் அமைப்பு முறையின் காரணமாகவே, அந்த மூத்த கலைஞர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க முன்வந்திருக்கின்றார்கள் என்ற விவரமும் நீதிபதிகளிடம் முறையாக தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நீதிபதிகளின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள்

ஒரு இடத்தில் சொந்த சங்கதி வேண்டாம் என்று கூறும் ஈஸ்வரி இன்னொரு இடத்தில் மாற்றிச் சொல்கிறார். பாட்டிலில் கூழாங்கல்லைப் போட்டு குலுக்குவது போல்இருக்கிறது என்பதும், டூயட், கோரஸில் குரல் சேரவில்லை என்பதற்காக உங்களிடம் ஒற்றுமை இல்லை, போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக்கூடாது, ஒற்றுமை இருந்தால் பாட்டு இல்லாவிட்டால் நிப்பாட்டு போன்ற விமர்சனங்கள் ஏற்புடையதாக இல்லை.

சில பாடல்களுக்கு ஈஸ்வரி அம்மையார் 50க்கு குறைவாகவே மதிப்பெண்கள் வழங்கியுள்ளார். ஆனால், மாறாக அதே பாடல்களுக்கு, இன்னொரு நடுவரான சுந்தரோ எல்லாப் பாடல்களையும் பெரும்பாலும் சூப்பர் என்று சொல்லி 78 மதிப்பெண்கள் வழங்கியுள்ளார். எல்.ஆர். ஈஸ்வரி அவர்களுக்கும், சுந்தருக்குமான மதிப்பெண்கள் வித்தியாசம் 30 புள்ளிகள்.

இதுபோன்ற முரண்பாட்டு விமர்சனங்களும், புள்ளிகள் வழங்கும் விதத்தில் ஏகப்பட்ட இடைவெளிகளும், நீதிபதிகளுக்கிடையில் ஓர் ஒழுங்கு முறையும், எவ்வாறு – எத்தகைய அம்சங்களுக்கு புள்ளிகள் எவ்வளவு வழங்குவது – என்பது போன்ற உடன்பாடுகளும் இல்லையோ என்ற சந்தேகத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த பாடல் திறன்போட்டி ஏற்படுத்துகின்றது.

பாடகர் பிரசன்னாவின் விமர்சனம் பாடுபவரின் நல்ல அம்சங்களையே எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது. அது பாடுபவருக்கு உற்சாகத்தையும் தைரியத்தையும் வழங்க உதவும்.

கடுமையான விமர்சனக் கணைகள் பாடுபவரை செம்மைப் படுத்துவதற்கு பதில் பயத்தையே உண்டு பண்ணும் என்பதையும், அதிலும் ஒரு பாடல் கலைஞராக பயிற்சிகள் மூலம் உருவெடுப்பதற்கு நமது உள்நாட்டில் இருக்கும் சிரமங்கள், பின்னடைவுகள், வருமானம் இல்லாமை  போன்ற அம்சங்கள் – அதிலும் குறிப்பாக மூத்த கலைஞர்களின் திறமைகள், கடந்த கால பங்களிப்புகள் – நீதிபதிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டிருந்தால் இதுபோன்ற சிறு குறைகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படிச் செய்திருந்தால், மேடைகள் பல கண்ட – இதுபோன்ற போட்டிகள் பல கண்ட – எல்.ஆர். ஈஸ்வரியும் மற்ற நீதிபதிகளும், தங்களின் கருத்துக்களை இன்னும்  செம்மையாக வழங்கியிருக்கக் கூடும்.

இனிவரும் மேடைகளில் எங்கள் மனம் கவர்ந்த எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் நாசூக்கான விமர்சனத்தை எதிர்பார்க்கிறோம்.

காருக்காக அல்ல – கலைக்காகவே உள்நாட்டுக் கலைஞர்கள்…

நமது நாட்டில் சாதாரண தொழிலாளி கூட கார் வைத்திருப்பார்கள். கார் மலேசியர்களுக்குப் பெரிதல்ல. போட்டியில் காரை வெல்ல வேண்டும் என்பதற்காக நமது உள்நாட்டுக் கலைஞர்கள் யாரும் இந்தப் பாடல் திறன் போட்டியில் பங்கேற்பதாக நாங்கள் நினைக்கவில்லை.

மாறாக, கலைத் துறையின் மீதான ஈடுபாடு – தங்களின் திறனை வெளிப்படுத்த கிடைத்த ஒரு களம் – வாசகர்களின்-நீதிபதிகளின் விமர்சனங்களின் மூலம் தங்களின் திறனை மெருகேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு – பயிற்சிக்கான ஒரு மேடை – போன்ற கோணங்களில்தான் நமது கலைஞர்கள் அதிலும் குறிப்பாக மூத்த கலைஞர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்பதுதான் உண்மை.

எத்தனையோ பேர் இந்நிகழ்வை காண விழைவது போட்டியில் யார் வெல்லப் போகின்றார்கள் என்பதற்காக மட்டுமல்ல!

எல்.ஆர். ஈஸ்வரி போன்ற ஆற்றல் மிக்க பாடகியின் இசை அறிவையும், பகிர்வையும், கருத்துக்களையும் கேட்டு மகிழவும், இரசிக்கவும்தான்!

அடுத்து வரும் வானவில் பாடல் திறன் போட்டிகளில் நமது பாடகர்களை புண்படுத்துவதை விட, பண்படுத்தும் முயற்சிகளை நீதிபதிகளை செய்யலாமே!

  • சா.விக்னேஸ்வரி