பெஷாவர், டிசம்பர் 16 – பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் ராணுவ பள்ளிக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் மாணவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான பெஷாவரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக்கூடத்துக்குள் இன்று 6 தலிபான்கள் தீவிரவாதிகள் திடீரென உள்ளே நுழைந்து மாணவர்களை சிறைபிடித்தனர்.
அவர்கள் அனைவரையும் கலையரங்கம் ஒன்றில் சிறை வைத்தனர். பாகிஸ்தான் ராணுவ சீருடையுடன் உள்ளே நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் பள்ளி வாகனத்துக்கும் தீ வைத்தனர்.
இதன் பின்னர் தலிபான் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். தலிபான்களும் பதில் தாக்குதல் நடத்த பள்ளிக்குள் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி ஒரு ஆசிரியை உட்பட மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தீவிரவாதிகளில் ஒருவன் உடலோடு கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய அந்த இடமே புகைமூட்டமானது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சிட்னியில் 17 பேரை பிணைக் கைதியாக பிடித்து வைத்த ஈரான் தீவிரவாதியின் செயலால் இருவர் உயிரிழந்த பதற்றம் அடங்குவதற்குள்ம், பள்ளி மாணவர்களை தலிபான்கள் குறி வைத்திருப்பது உலகை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான்கள் அமைப்பு அறிவித்துள்ளது.