கோலாலம்பூர், டிசம்பர் 17 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் பொருட்டு சிரியா செல்லவிருந்த ஒருவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
39 வயதான அந்நபர் புதன்கிழமை காலை 5.30 மணிக்கு தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறை ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்தார்.
“கோலாலம்பூரில் இருந்து முதலில் புரூனே சென்று, பின்னர் அங்கிருந்து துருக்கி வழியாக சிரியா செல்ல அந்நபர் திட்டமிட்டிருந்ததாக நம்புகிறோம். கைது செய்யப்பட்டபோது விமான நிலையத்தில் அந்நபர் தனியாகத்தான் இருந்தார்.இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரவிருந்த 46 பேர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தனி நபர்கள் அல்லது குழுக்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்,” என்றார் காலிட் அபு பக்கர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர மலேசியா வழி செல்பவர்கள் தடுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்த அவர், போதை மருந்து மற்றும் மனிதக் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.