பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 18 – கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்பட்ட 3 நபர்கள் புதன்கிழமை அதிகாலை காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது பந்திங்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதிகாலை 4.30 மணிக்கு வந்த அவசர அழைப்பின் பேரில் போலீசார் கொள்ளைச் சம்பவம் நிகழவிருந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஜாலான் செகன்டிங் பகுதியில் 5 சந்தேக நபர்களை எதிர்கொண்டனர்.
போலீசாரைக் கண்டதும் அச்சந்தேக நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், போலீசாரும் திருப்பிச் சுட்டதாக சிலாங்கூர் காவல்துறை துணைத்தலைவர் டத்தோ அப்துல் ரஹிம் ஜாஃபர் தெரிவித்தார்.
சுமார் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட அந்த 5 ஆடவர்களும் வெளிநாட்டவர்கள் என்றும், கடந்த 2013-ம் ஆண்டு சுபாங் ஜெயாவில் திருடப்பட்ட ஒரு காரை அவர்கள் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
“போலீசாரிடமிருந்து தப்பிக்க 5 பேரும் காரை வேகமாக செலுத்திய போது அது சாலையோர விளக்குக் கம்பத்தில் மோதி நின்றது. அவர்களில் ஒருவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். நாங்கள் திருப்பிச் சுட்டதில் கொள்ளையர்களில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மற்ற இருவரும் அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஓடி தப்பித்துள்ளனர். அவர்களைத் தேடி வருகிறோம்,” என்று அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் இருந்து ஒரு துப்பாக்கி, 2 பாராங் கத்திகள் மற்றும் 3 செல்பேசிகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அப்பகுதியில் உள்ள வீட்டை உடைத்து 5 பேரும் கொள்ளையடிக்க முற்பட்டபோது போலீசார் அங்கு சென்றதாகக் குறிப்பிட்டார்.