புதுடெல்லி, டிசம்பர் 18 – சன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்நிறுவனத்திற்கு மேலும் ஒரு பிரச்சனையாக, அனைத்து வங்கிகளும், எண்ணெய் நிறுவனங்களும் இனி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு கடன் வழங்க முடியாது என தெரிவித்துள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள் நிலுவையில் உள்ள தொகையை செலுத்திவிட்டு விமானங்களை இயங்குவதற்கான எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளதால் ஸ்பைஸ்ஜெட்டின் விமான சேவை முற்றிலும் முடங்கிப்போயின.
இந்நிலையில், இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடியை சற்று குறைப்பதற்காக சுமார் 600 கோடி ரூபாய் வரை கடன் உதவி அளிக்கலாம் என வங்கிகளுக்கு பரிந்துரை செய்தது.
மேலும், வங்கிகள் வழங்கும் அந்த கடன் தொகை, அந்நிறுவனத்திற்கு அடுத்த 8 வார காலத்தில் நீண்ட கால முதலீட்டை பெறுவதற்கும், உருவாக்குவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
எனினும், தனியார் மற்றும் பொது வங்கிகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு கடன் அளிக்க முன் வரவில்லை. அதற்கு முக்கியக் காரணம், முன்பு இதே நிலையில் இருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வங்கிகள் 7,500 கோடி ரூபாய் வரை கடனளித்தன.
எனினும் அந்த கடன் தொகையில், சுமார் 5,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பொது வங்கிகள், ஸ்பைஸ்ஜெட் திவாலாகும் முன்பு செலுத்த வேண்டிய கடன் தொகைகளை பெற்றுக் கொள்வதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.
நிலுவையில் உள்ள கடன் தொகைகளை ஈடு செய்யும் வகையில், பொது வங்கி அந்நிறுவனத்தின் ‘நிலையான வைப்புத் தொகை’ (Fixed Deposits)-ஐ எடுத்து வருகின்றன.
பொருளாதார நெருக்கடியின் உச்சத்தை எட்டி உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குறித்து சன் குழுமத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“ஸ்பைஸ்ஜெட்டின் நிலை இதை போன்று தொடர்ந்தால், நிறுவனத்தை கருணை கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.