Home இந்தியா விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் காலமானார்!

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் காலமானார்!

767
0
SHARE
Ad

சென்னை, டிசம்பர் 20 – தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் மற்றும் அதன் துணைப் பத்திரிக்கைகளை நடத்தும் விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (வயது 79) நேற்று மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

Late S.Balasubramanian Vikatan

ஆனந்த விகடன் பத்திரிக்கையை உருவாக்கி நடத்தியவரும், சந்திரலேகா, ஔவையார் போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவருமான, எஸ்.எஸ்.வாசன் இவரது தந்தையாவார்.

#TamilSchoolmychoice

1935 டிசம்பர் 28-ம் தேதி பிறந்த இவர், தனது 21-வது வயதில் பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தியவர்.

ஆனந்த விகடன், இன்றும் தமிழ் வாரப் பத்திரிக்கைகளில் முதன்மை இடத்தைப் பிடித்து பீடுநடை போடுவதற்கும், அந்தப் பத்திரிக்கையை இணையப் பதிப்பு போன்ற நவீனமயமாக்கும் முயற்சிகளிலும் வெற்றி பெற்றவர் இவர்.

விகடன் குழுமம் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வழங்கி வருகின்றது.

நகைச்சுவைத் துணுக்குக்காக சிறைத் தண்டனை பெற்றவர்

1987ல் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான, தமிழக சட்டமன்றத்தைப் பற்றிய ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர். அரசு இவரை கைதுசெய்து சிறையில் அடைத்தது.

மன்னிப்பு கேட்டால் விட்டு விடுவோம் என தமிழக அரசு பணித்தும் எனது எழுத்து உரிமையையும், சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என சிறைத் தண்டனையை ஏற்றார்.

இருப்பினும் பின்னர் மேல்முறையீட்டில் விடுதலையானவர், தன்னை கைதுசெய்தது தவறு என வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று, தான் செலுத்திய 1000 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார்.

இலக்கிய ஆர்வம் கொண்டவர்

ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட மிகப் பிரபலமான எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத் தந்தவர். திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவித்த பண்பாளர். இவரும் ஓர் எழுத்தாளரே. ‘சேவற்கொடியோன்’ என்ற புனைபெயரில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

ஆனந்த விகடன் வெறும் ஜனரஞ்சக பத்திரிக்கையாக மட்டும் உலா வராமல், இலக்கியம் சார்ந்த பத்திரிக்கையாகவும், இலங்கைப் பிரச்சனை போன்ற விவகாரங்களில் மக்களின் கருத்துக்களைத் துணிந்து பிரதிபலிக்கும் பத்திரிக்கையாகவும் உருவெடுக்க பாடுபட்டவர்.

தந்தை எஸ்.எஸ்.வாசனின் வழியைப் பின்பற்றி திரைத்துறையிலும் முத்திரை பதித்தவர் பாலசுப்ரமணியன். தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, முத்துராமன் நடித்த ‘எல்லோரும் நல்லவரே’ போன்றவை இவர் இயக்கிய சில படங்கள்.

விவசாயத்தின் மீதும், பறவைகள் மீதும் தீராத காதல்கொண்ட இவர், ஏராளமான அரியவகை வெளிநாட்டுப் பறவைகளை வளர்த்து வந்தார்.

இயக்குநர் எஸ்.ஷங்கர் இயக்கிய, இந்தியன் படத்தில் கதாநாயகி மணிஷா கொய்ராலா வைத்திருப்பது போல் அரிய வகைப் பறவைகள் கொண்ட  பறவைக் காட்சி சாலை ஒன்று காட்டப்படும். அந்த பறவைக் காட்சி சாலை இவருடையதுதான்.

இவருக்கு ஆறு மகள்கள், ஒரு மகன். இவரது மகன் பா.சீனிவாசன் தற்போது விகடன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.