இஸ்லாமாபாத், டிசம்பர் 20 – பெஷாவர் தாக்குதலில் நிலைகுலைந்து போய் உள்ள பாகிஸ்தான்,நூற்றுக்கணக்கான குழந்தைகளின் இறப்பிற்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரானத் தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளது.
இதுநாள் வரை தூக்கு தண்டனைக்கு விலக்கு அளித்திருந்த பாகிஸ்தான், இந்த தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதிகளை தூக்கிலிட முடிவு செய்துள்ளது.
பெஷாவர் நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை, இராணுவப் பள்ளி ஒன்றில் அதிரடியாக நுழைந்த தலிபான் தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக குழந்தைகளை நோக்கி சுட்டதில், நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர். உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த புதன்கிழமை அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். தலிபான் உட்பட பல்வேறு தீவிரவாத இயக்கங்களை பூண்டோடு ஒழிக்க பாகிஸ்தான் அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என்று இம்ரான்கான் உட்பட எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான தலிபான் தீவிரவாதிகளை உடனடியாக 2 நாட்களுக்குள் தூக்கில் போட வேண்டும் என்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தனது வலைதளம் மூலம் பாகிஸ்தான் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
குழந்தைகளின் இறப்பு காரணமாக தலிபான்கள் மீது கடும் கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான் அரசு இதற்கு சம்மதம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.