இஸ்லாமாபாத், டிசம்பர் 20 – மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஜாகி-உர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்ததற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், லாக்வியை மேலும் 3 மாதங்கள் சிறையிலடைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பையின் முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினர்.
8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில், பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாபிடம் இந்திய அரசு தீவிர விசாரணை நடத்தியது.
அப்போது, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட லக்வியை இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
இதனிடையே, இதுதொடர்பான வழக்கு விசாரணை, பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் லக்விக்கு ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கு இந்தியாக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து பேசிய இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்திய அரசால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், லக்விக்கு வழங்கப்பட்ட ஜாமின் நீதிக்கு எதிரானது.
அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அரசு, லக்விக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து மேலும் 3 மாதங்கள் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது.