Home அவசியம் படிக்க வேண்டியவை ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது!

‘அஞ்ஞாடி’ நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது!

674
0
SHARE
Ad

poomani,சென்னை, டிசம்பர் 20 – ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் பூமணிக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தலித் படைப்பிலக்கியம் என்ற வகைமை உருவாகும் முன்பே ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பின்னணியாக கொண்டு ‘பிறகு’ என்ற கலாபூர்வமான நாவலை எழுதியவர் பூமணி.

சிறுகதை, மொழிபெயர்ப்பு, சினிமா என பல தளங்களில் இயங்கிவரும் கரிசல் காட்டுப் படைப்பாளியான பூமணி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து எழுதிய பிரமாண்ட வரலாற்று நாவலான ‘அஞ்ஞாடி’-க்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

வருடாவருடம் சர்ச்சைக்குள்ளாகும் சாகித்ய அகாடமி விருது சிறந்த எழுத்தாளரான பூமணிக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நாவலை ஒரு கலைப்படைப்பாகவும் மானுடவியல் ஆவணமாகவும், வெவ்வேறு சமூகங்களின் வரலாற்று நூலாகவும் வாசிக்க முடியும்.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கற்பனை கிராமமான கலிங்கல் என்ற ஊரில் ஒடுக்கப்பட்ட இரு ஜாதிகளைச் சேர்ந்த ஆண்டி மற்றும் மாரி என்ற இரு மனிதர்களின் குழந்தைப்பருவத்தில் இருந்து நாவல் தொடங்குகிறது.

காலம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. இந்திராகாந்திப் படுகொலையில் நாவல் முடிகிறது. இந்தக் காலப்பகுதியில், ஒரு ஊர் மற்றும் இரு குடும்பத்தினரின் வம்சபுராணமாக இந்த நாவல் இருந்திருந்தால் தமிழின் எதார்த்த நாவல்களில் பத்தோடு பதினொன்றாக இப்படைப்பு இருந்திருக்கும்.

ஆனால் 19-ம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம் தொடங்கி, பாண்டியர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களின் யுத்தங்கள், ஜமீன்கள் உருவாக்கம்,

கழுகுமலை மற்றும் சிவகாசி சாதிக்கலவரங்கள், நாடார் மக்களின் எழுச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம்கூட்டமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போக்குகள் என ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கதைகளோடு புதைத்து வைத்துள்ளது இந்த நாவல்.

19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தாதுவருஷப் பஞ்சங்களின் போது மக்கள் அவதிப்பட்ட அனுபவங்களை அஞ்ஞாடி போல இவ்வளவு தீவிரமாக வேறு எந்த நாவலாவது பதிவுசெய்திருக்குமா என்று தெரியவில்லை.

சமீபத்தில் வெளியான ஜெயமோகனின் வெள்ளையானையிலும் தாதுவருஷ பஞ்சம் சித்தரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. போர்கள், சண்டைகள், மோதல்களுக்கு நடுவில் ரத்தமும் சதையுமாக அஞ்ஞாடி நாவலில் கதாபாத்திரங்கள் உலாவருகின்றனர்.

கிராமிய வாழ்க்கை நோக்குகள் கரிசல் மொழியில் அங்கதத்துடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்து போன காலகட்டத்தின் வாழ்வாதாரம் மற்றும் பொருள்சார் கலாசாரத்தைத் தெரிந்துகொள்ளும் களஞ்சியமாகவும் இந்நாவலை வாசிக்கமுடியும்.

மொழிக்கு, பண்பாட்டுக்கு ஒரு படைப்பாளியின் கொடை இதுவாகவே இருக்கமுடியும். பூமணி அதை தனது ‘அஞ்ஞாடி’ நாவலின் மூலம் சரியாகவே சாதித்துள்ளார். பூமணிக்கு வாழ்த்துகள்.

எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். இவர் 1947-ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.