Home இந்தியா திருமணத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் செல்லாது – நீதிமன்றம் தீர்ப்பு!

திருமணத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் செல்லாது – நீதிமன்றம் தீர்ப்பு!

423
0
SHARE
Ad

allahabad highcourt,அலாகாபாத், டிசம்பர் 20 – திருமணம் என்ற தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறுவது செல்லாது என உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த 5 தம்பதியர்களில், கணவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். மனைவி இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். திருமணத்துக்காக கணவரின் மதமான இஸ்லாமுக்கு 5 பெண்களும் மதம் மாறியிருந்தனர்.

#TamilSchoolmychoice

அந்த 5 தம்பதியினரும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தனர். இந்த மனுக்கள், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வானி முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி தெரிவித்ததாவது;-

“கடந்த 2000-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தின் மீது நம்பிக்கை என்ற அடிப்படையில்லாமல், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்துக்காக மட்டும், அந்த மதத்துக்கு மாறுவது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது”.

“அதன்படி, இந்த மனுக்கள் மீதும் தீர்ப்பளிக்கிறேன். ஏனெனில், இந்த திருமணங்கள் அனைத்தும், புனித குரானின் சூரா 2 அயாத் 221-ஆவது பிரிவுக்கு எதிரானதாகும். அந்தப் பிரிவில், இஸ்லாம் மீது நம்பிக்கையில்லாத பெண்ணை திருமணம் செய்யக் கூடாது”.

“அதேபோல் இஸ்லாமியர்கள் தங்களது மகள்களை, இஸ்லாத்தின் மீது நம்பிக்கை வைக்காதோருக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுத்தாக்கல் செய்துள்ள பெண்கள் அனைவரும், தங்களுக்கு இஸ்லாம் குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர்”.

“திருமணத்துக்காகவே, இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்களின் மதம் மாறுதலை அங்கீகரிக்க இயலாது” என்றார் அவர். மேலும், 5 தம்பதியினர் தாக்கல் செய்திருந்த மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.