சென்னை, டிசம்பர் 22 – பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான கங்கை அமரன், நடிகை குட்டி பத்மினி, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் மூவரும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் அமித் ஷா பங்கேற்ற பிரமாண்ட பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அவர், திமுகவும் காங்கிரசும் இணைந்திருந்த முந்தைய மத்திய அரசு ரூ. 12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்காக நாட்டு மக்களுக்கு இரு கட்சிகளும் பதில் அளித்தே ஆக வேண்டும் என்றார் அவர்.
இதையடுத்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிகண்டு ஆட்சி அமைக்கும் என்றார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக குறைந்த பட்சம் 122 இடங்களை பிடித்து ஆட்சி அமைப்பது உறுதி என்றார் தமிழிசை.
முன்னதாக இந்தப் பொதுக்கூட்ட மேடையில் அமித் ஷா முன்னிலையில் கங்கை அமரன் பாஜகவில் இணைந்தார்.
அவரை அடுத்து நடிகை குட்டி பத்மினி, பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம் ஆகியோரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வான ஏ.ஏ.எஸ்.மணி மற்றும் அதிமுக இளைஞரணி செயலர் முத்துக்குமார் இருவரும் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.