கோலாலம்பூர், டிசம்பர் 22 – நேற்று கோலாலம்பூரின் மையத்திலுள்ள -சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வரலாற்றுபூர்வ இடமான டத்தாரான் மெர்டேக்காவை பல பாண்டா கரடிகள் ஒரே நேரத்தில் படையெடுத்து பார்வையாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தின.
பயந்து விடாதீர்கள்! இவை அனைத்தும் உயிருள்ள பாண்டா கரடிகள் இல்லை.
மாறாக, காகிதத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை பாண்டா கரடிகளாகும். பிரெஞ்சு வடிவமைப்பாளர் பாலோ கிரெஞ்சோன் இவற்றை உருவாக்கியிருந்தார்.
ஆறு விதமான வெவ்வேறு அளவுகளில் மொத்தம் 1,600 பாண்டா கரடிகளை அவர் இவ்வாறு உருவாக்கியிருக்கின்றார்.
“படைப்பாற்றலைப் பாதுகாக்கும் கலாச்சாரத்தைத் தொடங்குவோம்” (Initiating the Culture of Creative Conservation) என்ற கருப்பொருளோடு தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் இந்த செயற்கை பாண்டா கரடிகள் மலேசியாவில் முக்கிய 15 மையங்களுக்கு இந்த பாண்டா கரடிகள் வருகை தரும்.
பாண்டா கரடிகள் சுற்றுலா டிசம்பர் 21 தொடங்கி ஜனவரி 25 வரை தொடரும். பாண்டா கரடிகளை பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை பரப்புவதும், இதுபோன்ற அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
1600 செயற்கை பாண்டா கரடிகள் உருவாக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
புள்ளி விவரங்களின்படி காடுகளில் தற்போது ஏறத்தாழ 1600 பாண்டா கரடி இன வகைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன என்ற அறிவிப்புதான் இதற்கான காரணம்!
படங்கள்: EPA